பிக் பாஸ் சீசன் 8 : அடுத்த ரவீந்தர் ஆகும் முத்துக்குமரன்?

Published On:

| By christopher

சென்ற வாரம் வீட்டை விட்டு வெளியே சென்ற ரவீந்தர் போகும் முன் முத்துக்குமரனிடம், ‘நான் உன்ன நம்புறேன். வியூகம் செய்!’ என துப்பாக்கிய பிடிங்க முத்து… என்கிற ரேஞ்சிற்கு தான் செய்து வந்த அணியின் வியூகப் பொறுப்பை முத்துக்குமரனிடத்து விட்டுச் சென்ற காட்சியை பார்த்தோம்.

இன்றைய எபிசோடின் தொடக்கமே முத்துக்குமரன் புதிதாக வியூகம் செய்யும் காட்சியில் தான் தொடங்கியது. ’பெண்கள் அணியில் முதலில் வெளியேற்றப்பட வேண்டிய ஆள் சவுந்தர்யா. எல்லோரும் அவரையே நாமினேஷன் செய்ய வேண்டும்’, ‘ஜாக்குலின் வெளியில் தெரியாமல் இருக்க கிச்சன் டீமில் போட வேண்டும்’ ‘ எனக்கு இருக்கும் டைரக்ட் நாமினேஷன் வாய்ப்பை பயன்படுத்தி, நான் ஜாக்குலினை நாமினேட் செய்யப் போகிறேன்.

அதுவும், பலவீனமான காரணத்தை சொல்லி நாமினேட் செய்வேன்’ என முத்துக்குமரனின் வட்டாரத் தமிழ் தெறித்த வியூகங்களை வழக்கம் போல் அப்படியே கேட்டுக் கொண்டனர் ஆண்கள் அணியினர். ஆண்கள் அணியைப் பொறுத்தவரை, ‘மகாநடிகன்’ படத்தில் வரும் மந்திரி கதாபாத்திரங்கள் போல் ‘இரண்டாவது, மூணாவது இடத்தில் இருந்து தலைவனுக்கு ஆமாம் சாமி போட்டே பழகி விட்டனர்’.

சரி, பெண்கள் அணியில் ஏதேனும் வியூகம் அமைந்ததா என்று பார்த்தால், அந்தப் பக்கம் புத்திசாலித் தனத்திற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. சொல்லப் போனால், இந்த வாரம் யாரை ஆண்கள் அணிக்கு அனுப்புவது என்பதைக் கூட அவர்கள் கடைசி நிமிடம் வரை யோசித்து வைக்கவில்லை.

இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதில் ஆண்கள் அணியைச் சேர்ந்த சத்யா வென்றார். கடைசி நிமிடம் வரை அவருக்கு டஃப் கொடுத்தார் பவித்ரா. ஆனால், இடையில் வெளியேறிய ஜாக்குலின் – சவுந்தர்யா இடையே சலசலப்பு ஏற்பட்டது. அது நடந்துகொண்டிருக்கும் போதே மறுபக்கம் தர்ஷிகா – சுனிதா இடையே ஒரு ஆங்கில வார்த்தைப் போரே நடந்துகொண்டிருந்தது. இதற்கு இடையில், பாவம் அணிக்காக விளையாடிய பவித்ராவை உற்சாகப்படுத்த கூட ஆள் இல்லை. ‘சீசன் ஆரம்பித்து ஒரு வாரம் ஆச்சு. இந்த பெண்கள் அணி எப்போது தான் இந்த சீசனின் தீமை புரிந்துகொள்வார்களோ’ என்று தெரியவில்லை.

‘நானா தப்பு பண்ணேன்?’ என ஜாக்குலினிடம் குமுறிக் குமுறி சவுந்தர்யா அழுத காட்சிகளைப் பார்க்க முடிந்தது. மேலும், ‘இப்போ என்ன, இதை சொல்லி நாமினேஷன் வேற பண்ணுவாங்க….!’ என்று வேறு சொன்னார். ’பின்ன, பிக் பாஸ் என்றால் நாமினேஷன் செய்யாம என்னம்மா செய்வாங்க? ‘ என்று கேட்கத் தோன்றியது. ஆனால், நம்மை விட மிக காரமாக வார இறுதியில் வி.சே கேட்பார் என நம்புவோமாக.

இதற்கு பிறகு முத்துக்குமரன் – அன்ஷிதா இடையே நடந்த ஒரு தேவை இல்லாத வாக்குவாதத்தில் அன்ஷிதா செய்ததே தவறு. அவசியமே இல்லாமல், ‘போடா!’, ‘நீ பெரிய இவனா?’ போன்ற வார்த்தைகளை நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாக்குவாதத்தை மிக நேர்த்தியாக கையாண்டார் முத்துக்குமரன்.

இந்த வாரத்திற்காக பெண்கள் அணியில் ஆட தீபக்கும், ஆண்கள் அணியில் ஆட தர்ஷா குப்தாவும் அவரவர் அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்த வாரத்திற்கான மளிகை பொருட்களை எடுப்பதற்கு தர்ஷாவை அனுப்பி ஆண்கள் அணியின் பட்ஜட்டை ஏற்றி விடலாம் என்பது ஜாக்குலின் போட்ட வியூகம். ஆனால், அதற்கான ஆளாக தர்ஷாவைத் தேர்ந்தெடுத்தது தான் ஆகப் பெரும் தவறு. ஏனென்றால், அவர் ஆண்கள் அணியிடம் நடந்துகொள்வதைப் பார்த்தால் குழந்தையும் கூட ஓவர் ஆக்டிங் என்று சொல்லிவிடும். ஆம், ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் அவர் நடித்ததை விட ஓவர் ஆக்டிங்.

ஆக, ஆண்கள் அணி சீறும் சிறப்புமாக மளிகை பொருட்களை எடுக்க, தடுமாறினர் பெண்கள் அணியினர். இதன் விளைவாக ஆண்கள் அணி அதிகமாக எடுத்துள்ளனரா? அல்லது, பெண்கள் அணியினர் மிகக் குறைவாக எடுத்துள்ளனரா என்பது நாளையே தெரிய வரும்.

இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நடந்தது. ஆண்கள் அணியினர் , கிளிப் பிள்ளை கேட்பது போல் முத்துக்குமரனின் வார்த்தைகளுக்கு இணங்க சவுந்தர்யாவை நாமினேட் செய்ய, தன் வியூகக் கணக்கின் படி ஜாக்குலினை டைரக்ட் நாமினேட் செய்தார் முத்துக்குமரன். மறுபக்கம், தீபக்கை டைரக்ட் நாமினேட் செய்தார் பவித்ரா. இப்படியாக முடிந்தது இந்த எபிசோட். இதில், மளிகை பொருட்கள் எடுத்ததில் ட்விஸ்ட் உள்ளதா? ஆண்கள் அணி எப்போது சுயமாக யோசிப்பார்கள்? பெண்கள் அணி எப்போது அணியாக இருப்பார்கள்? இந்த டிசம்பருக்குள் சென்னைக்கு என்ன ஆகும்? போன்ற கேள்விகள் அப்படியே இருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

டாப் 10 நியூஸ் : கனமழை எச்சரிக்கை முதல் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம் வரை!

என்எல்சி: போனஸ் பேச்சு வார்த்தை தோல்வி: தொடர் போராட்டம் அறிவிப்பு!

நிலக்கரி இறக்குமதி 11.4 சதவிகிதம் அதிகரிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel