தொலைக்காட்சி கண்டுபிடித்த காலம் தொட்டே தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் ‘இதில் சிறந்தது ஆண்களா? பெண்களா?’ , ‘இதற்கு தேவை ஆண்களா? பெண்களா?’ போன்ற பல தலைப்புகளின் கீழ் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை எவரும் பார்க்காவிட்டாலும் சும்மாவாவது ஓட விடுவது அந்தப் பண்டிகைக்கான சடங்கு முறைகளில் ஒன்று. அதற்கு காரணம் இந்த ஆண்கள் vs பெண்கள் என்பது எப்போதும் சுவாரஸ்யம் தரக் கூடிய ஒரு தலைப்பாக இருப்பது தான்.
இப்படியான ஒரு தலைப்பை தான் இந்த பிக் பாஸ் சீசனின் ஒட்டு மொத்த தீமாக வைத்துள்ளனர். பொதுவாக இந்த மாதிரியான தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தும் போதோ, விவாதம் நடத்தும் போதோ ஆண்கள் மிக ஒற்றுமையானவர்கள், பிரச்சனையே இல்லாதவர்கள் என்பது போலும், 4 பெண்கள் ஒரே வீட்டில் இருக்க முடியாது என்பது போன்ற கருத்துகளும், காமெடிகளும் நம் சமூகத்தால் மிகவும் ரசிக்கப்படும். ஏறத்தாழ அதுபோன்ற ஒரு யுக்தியை தான் நேற்றைய (அக்டோபர் 8) எபிசோடில் பிக் பாஸ் புரொடியூசர்ஸ் கையாண்டுள்ளனரோ என எண்ணத் தோன்றியது.
அதாவது, பிக் பாஸ் வீடு தற்போது ஆண்கள் – பெண்கள் என இரு அணிகளாக உள்ளது. அதில் ஆண்கள் அணியில் இருந்து ஒரு நபரை தேர்வு செய்து பெண்கள் அணிக்கு விளையாட அனுப்ப வேண்டும். பெண்கள் அணியில் இருந்து ஒரு நபரை தேர்வு செய்து ஆண்கள் அணிக்கு அனுப்ப வேண்டும்.
அப்படி, அனுப்புகின்ற நபர்களுக்கு டைரக்ட் நாமினேசன் செய்யும் வாய்ப்பு உட்பட சில அட்வான்டேஜ்கள் உள்ளது என பிக் பாஸ் அறிவித்தார். மேலும், அப்படி அனுப்புகின்ற நபர் தங்களது சொந்த அணிக்கு விசுவாசமானவராகவும் இருக்க வேண்டும்.
ஆக, யாரை அனுப்ப வேண்டும் என ஆண்கள் அணியின் டிஸ்கஷனில் அனைவரும் அமோதித்து முத்துக்குமரனை தேர்ந்தெடுத்தனர் என நமக்கு காட்டப்பட்டது. ஆனால், பெண்கள் அணியின் கலந்துரையாடல் அவ்வளவு எளிதாக முடியவில்லை.
ஜாக்லின் vs சுனிதா, தர்ஷா குப்தா vs பவித்ரா , ஜாக்லின் vs பவித்ரா, மீண்டும் தர்ஷா குப்தா vs பவித்ரா எனத் தொடர்ந்து இறுதியில் பவித்ரா தேர்வானார். ஆனால், அதற்குள் நடந்த வாக்குவாதங்களும் கண்ணீரும் ஏராளம். இது அவர்கள் அணிக்குள் இருக்கும் மிகப் பெரிய பலவீனத்தைக் காட்டுவதாகவே அமைந்தது.
சரி, இதை வைத்து ஆண்கள் அணி ஒற்றுமையாகவுள்ளது என்கிற கருத்துக்குள் நம்மால் வரவே முடியாது. ஏனெனில் ஆண்கள் அணிக்குள்ளும் சில பல கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், அது இன்னும் பெரிதாக வெளிப்படவில்லை என்பதே உண்மை. தற்போது வெளியாகியுள்ள ஒரு புரோமோவில் ரஞ்சித் – ரவீந்தர் இடையே நடந்த கைகலப்பே அதற்கு ஒரு சான்று.
ஆம், 50 ஆவது நாளில் போட வேண்டிய சண்டை கண்டெண்ட்டை 50 மணி நேரத்திற்குள் செய்யத் தொடங்கியுள்ளனர் இந்த சீசன் ஹவுஸ்மேட்ஸ். ஆனால், வழக்கம் போல் எபிசோடில் நம்மை ஏப்ரல் ஃபூல் ஆக்காமல் இருப்பின் நன்று.
ஏனெனில் ஏற்கனவே நேற்றைய புரோமோவில் வீட்டுக்குள் ஒரு உப்பு போர் வெடிக்கிறது என்பது போல் காட்டிவிட்டு எபிசோடில் அதை உப்பு சப்பில்லாத போராக மாற்றியது எல்லாம் பிக் பாஸில் நடக்கும் வாடிக்கையான விஷயம் தான்.
எபிசோட் முடியும் முன் முத்துக்குமரன் – ஜெஃப்ரி இடையே நடந்த மற்றொரு உப்பு சப்பில்லாத வாக்குவாதத்தை காண முடிந்தது. ஆனால், அது முத்துக்குமரனின் விளையாட்டு யுக்தியாகவே காண முடிந்தது. ஏனெனில் , தற்போது அவர் புகுந்த வீடான பெண்கள் அணியின் நம்பிக்கையை அவர் சம்பாதிக்க வேண்டும். அப்போது தான் ஆண்கள் அணியின் ஸ்லீப்பர் செல்லாக அவர் விளையாட முடியும். அதிலும், ஜாக்லின் போராட்டத்திற்காக நானும் ஆதரவு தரப் போகிறேன் என அவர் போட்டது மாஸ்டர் பிளான்.
இந்த எபிசோடை பொறுத்தவரை பெண்கள் அணியின் பலவீனம் அம்பலமாகியுள்ளது. மறுபக்கம், பல கருத்துவேறுபாடுகள் கொண்டிருந்தும் ஒற்றுமையாக தங்களைக் காட்டிக் கொள்கிறது ஆண்கள் அணி. இன்றைய புரோமோவில் காட்டியது போல் வீட்டிற்குள் கைகலப்பு நடந்ததா?, அப்படி நடந்தால் அதற்கு ரெட் கார்டு வழங்கப்படுமா?
பெண்கள் சண்டை, வாக்குவாதம், கைகலப்பு போன்ற வழக்கமான பிக் பாஸ் கண்டெண்ட்களைத் தாண்டி புதிதாக சுவாரஸ்யமான கண்டெண்ட்கள் எப்போது வரும் ? போன்ற கேள்விகளுக்கு விடை வார இறுதியிலே தெரியும் என எதிர்பார்க்கலாம். அதற்குள் பேசுவதற்கான பல பஞ்சாயத்துகளை ஹவுஸ்மேட்ஸ் உருவாக்குவதே கண்டெண்ட். அந்த வேலை மிகச் சரியாகவே நடக்கிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“சாம்சங் நிறுவனத்தின் கைப்பாவையாக மாறிய தமிழக அரசு”: அன்புமணி விமர்சனம்!
மழையிலும் போராட்டம்… சாம்சங் ஊழியர்கள் குண்டுக்கட்டாக கைது : சவுந்தரராஜன் கடும் கண்டனம்!