ஹோலி மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாரத் மேட்ரிமோனி வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
திருமணத்திற்கு வரன் பார்க்கும் இணையதளமான ’பாரத் மேட்ரிமோனி.காம்’ நிறுவனம் ஹோலி பண்டிகை மற்றும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை நேற்று (மார்ச் 7) வெளியிட்டது.
அதில், ஹோலி கொண்டாடிய பெண் ஒருவர் வண்ணப்பொடிகளால் நிறைந்த தனது முகத்தை கழுவுகிறார். அப்போது தனது மூக்கில் மற்றும் நெற்றியில் கீறல்களின் வழியே தெரியும் ரத்தக் காயங்களுடன் அவர் சோகமாக பார்ப்பது போன்று காட்சிப்படுத்தப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து ”சில நிறங்களை எளிதாக கழுவ முடியாது. ஹோலி பண்டிகையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பெண்களுக்கு நிரந்தர வடுவாக மாறி விடுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் மூன்றில் ஒரு பெண் தங்கள் வாழ்நாளில் ஹோலி கொண்டாடுவதையே நிறுத்தி விடுகிறார்கள்.
எனவே இந்த மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் ஹோலியை கொண்டாடுவோம்” என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த வீடியோவை தனது முதல் பதிவாகவும் பாரத் மேட்ரிமோனி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கோரும் அதே வேளையில் மறைமுகமாக ஹோலி பண்டிகைக்கு எதிராக வீடியோவை பாரத் மேட்ரிமோனி தயார் செய்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, அந்த நிறுவனத்தை தவிர்க்குமாறு ட்விட்டரில் #BoycottBharatMatrimony என்று ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
எனினும் இதுகுறித்து பாரத் மேட்ரிமோனி.காம் நிறுவனம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
5,000 பள்ளி மாணவிகளுக்கு விஷம்: ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு!
பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை: ஆனால் கைது இல்லை!