நடைப்பயணத்தில் திடீரென ஓடிய ராகுல்! ஏன் தெரியுமா?

Published On:

| By Jegadeesh

தேச ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தெலங்கானாவின் கோளப்பள்ளியில் இன்று (அக்டோபர் 30 ) திடீரென உற்சாகத்துடன் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் தற்போது 53வது நாளை எட்டியுள்ளது.

இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என 4 மாநிலங்கள் 18 மாவட்டங்கள் என 1,230 கி.மீ வரை நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.

இதனையடுத்து கடந்த 23 ஆம் தேதி தெலங்கானாவின் மஹபூப் நகர் குடிபெல்லாவை வந்தடைந்தார்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 30 ) தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டு வந்த ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி மற்றும் கட்சி எம்எல்ஏக்கள் உடனிருந்தனர்.

அப்போது கோளப்பள்ளி என்ற இடத்தில், திடீரென்று உற்சாகத்துடன் ஓட ஆரம்பித்தார் ராகுல் காந்தி.

அப்போது உடன் இருந்த மாணவர்களும், இளைஞர்களும் அவருக்கு ஈடு கொடுக்கும் விதமாக ஓடத் தொடங்கினர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இந்த வீடியோவை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

அக்கட்சியின் இளைஞர் அணி தேசியத் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் இந்த வீடியோவை பகிர்ந்து, ’நிறுத்த முடிந்தால் நிறுத்திப் பாருங்கள்’ என பதிவு செய்துள்ளார்.

’ராகுல், உடலை ஃபிட்டாக வைத்திருப்பதற்காகத்தான் இப்படி ஓடுகிறார்’ என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நேற்று (அக்டோபர் 29) பத்ராசல நடைப்பயணத்தின்போது பழங்குடியின மக்களை சந்தித்த ராகுல் காந்தி அவர்களுடன் சேர்ந்து ‘கொம்மு கோயா’ நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தேவர் சிலைக்கு வெள்ளி கவசம் அணிவித்த ஓபிஎஸ்

8 ஆண்கள் 11 குழந்தைகள்: அமெரிக்க பெண்ணின் விசித்திர ஆசை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share