அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடனான அமெரிக்க உறவை, “இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள்” என்ற புதிய வாசகத்துடன் வரையறுத்துள்ளார்.
2017-ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021-ஆம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். இன்னும் ஒளிபரப்பப்படாத தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் டொனால்ட் ட்ரம்ப் பேசும் போது, ’பாரத் அண்ட் அமெரிக்கா சப்சே அச்சே தோஸ்த்’ என்ற இந்தி வாசகத்தை பேசியுள்ளார். அதாவது இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது நட்பையும் பகிர்ந்துள்ளார்.
“இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபடுகிறார். அவரது வேலை அவ்வளவு எளிதானதல்ல. எங்களை ஒருவருக்கொருவர் நீண்டநாட்களாக தெரியும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் சமீபத்திய இந்தியா சார்பான இந்த கருத்தின் பின்னால் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், “ஹவ்டி மோடி” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அமெரிக்க இந்தியர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, இந்த முறையும் அமெரிக்காவில் ட்ரம்ப் அரசு தான் அமையும் என்று தெரிவித்தார். இந்த வாசகத்தை, டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய அமெரிக்கர்கள் வாக்கு வங்கியைப் பெறுவதற்காக பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்