சண்டே ஸ்பெஷல்: நீரிழிவாளர்களுக்கு பச்சரிசிக்கு பதில் புழுங்கலரிசிதான் நல்லதா?
நீரிழிவு (சர்க்கரை) நோய் வந்தது முதல் சிலர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்று காலையில் கேழ்வரகு சேர்த்த உணவும், இரவில் சப்பாத்தியும்தான் சாப்பிடுவார்கள். ஆனாலும் சர்க்கரை அளவு குறையாது.
இதற்கு மாற்றாக சில நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசி சாப்பிடலாமா… அல்லது புழுங்கலரிசிதான் சிறந்ததா என்கிற சந்தேகமும் உள்ளது. இந்த நிலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய எதை சாப்பிடுவது?
சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரை கலோரி அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். கலோரி அதிகமானால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்கும்.
எனவே உடலுக்குத் தேவையான அளவு கலோரிகளை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு எனர்ஜியும் கிடைக்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்காமல் இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளின் உணவில் 50 சதவிகிதம்தான் கார்போஹைட்ரேட் இருக்க வேண்டும். 20 சதவிகிதம் புரதச்சத்து இருக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளாக இருக்க வேண்டும்.
கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை என்று சொல்ல காரணமே அவற்றில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துதான். அரிசி மற்றும் கோதுமையோடு ஒப்பிடும்போது இவற்றில் நார்ச்சத்து அதிகம்.
சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை என்றாலும் இவற்றை குருணை குருணையாக உடைத்துச் சமைத்துச் சாப்பிடுவதுதான் சரியானது.
மாவாகத் திரிக்கும்போது இவற்றிலுள்ள நார்ச்சத்து அழிந்துவிடும். நார்ச்சத்து இல்லாத மாவுச்சத்து சாப்பிடும்போது அதனால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
நிறைய பேர், ‘நான் கேழ்வரகுதான் டாக்டர் சாப்பிடறேன்… ஆனாலும் சுகர் குறைய மாட்டேங்குது’ என்பார்கள். ‘எப்படி சாப்பிடறீங்க’ என்று கேட்டால் கஞ்சியாக சாப்பிடுவதாகச் சொல்வார்கள். அதுதான் தவறு.
சிறுதானியங்களை அப்படியே சோறு போல சமைத்து சாம்பார், ரசம், காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது ரவை போல உடைத்து உப்புமா, கிச்சடி போல செய்து சாப்பிடலாம்.
கோதுமையில் செய்யப்படுகிற சப்பாத்தி, தோசையிலும் சரி, அரிசி சாதத்திலும் சரி ஒரே அளவிலான சர்க்கரைதான் இருக்கும். எனவே நார்ச்சத்துள்ள தானியங்கள்தான் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தவை.
அந்த வகையில் பச்சரிசியில் நார்ச்சத்து மிக மிக குறைவு. புழுங்கல் அரிசியில் நார்ச்சத்து ஓரளவு அதிகம். பாரம்பரிய அரிசி வகைகளான மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி போன்றவற்றில் இன்னும் அதிகம்.
அதற்காக ஒரு கப் கறுப்பு கவுனி அல்லது மாப்பிள்ளை சம்பா அரிசி சாதத்துக்கு பதில் இரண்டு கப் சாப்பிடுவதும் தவறு. அரிசியின் அளவும் முக்கியம், அது என்ன அரிசி என்பதும் முக்கியம். அதற்கேற்ப உங்கள் உணவுத் திட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள்” என்கிறார்கள் நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்த வருஷம் போகலாம்: அப்டேட் குமாரு
போஸ் கொடுக்கும் துரைமுருகனே வெள்ளத்துக்கு காரணம்: கராத்தே காட்டம்!
சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!
சத்தமின்றி உதவிய உதயநிதி: மாற்றுத் திறனாளிகள் நெகிழ்ச்சி!