கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ள ‘PayCM’ சுவரொட்டிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு 40% சதவீதம் கமிஷன் அரசாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் காங்கிரஸ் இவ்வாறு செய்துள்ளது.
பேடிஎம் க்யூஆர் கோடில் கர்நாடக முதல்வர் பொம்மையின் புகைப்படத்தை பிரிண்ட் செய்து பெங்களூரு நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். அதில் ’PayCM என்ற தலைப்பில் 40% கமிஷன் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலுள்ள க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து அரசு ஒப்பந்தங்களை பெற 40 சதவீதம் முதல்வருக்கு நேரடியாக பணம் செலுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் அரசு ஒப்பந்தங்களை வழங்குவதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பாஜக அமைச்சர்கள் 40 சதவீதம் கமிஷன் பெறுவதாக கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம்சாட்டியது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் கடிதம் எழுதியிருந்தனர். எனினும் இதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கையும் மத்திய அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தான் 40 சதவீத கமிஷன் கேட்கும் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் இத்தகைய நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ஐதராபாத்திலும் எதிரொலித்த 40 சதவீதம்!
கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘விடுதலை நாள்’ நிகழ்ச்சிகளில் பசவராஜ் பொம்மை பங்கேற்க இருந்தபோது இதே போன்று ‘40% முதல்வர் வருக’ என்ற அச்சிடப்பட்ட வரவேற்பு பேனர்கள் நகரெங்கும் அமைக்கப்பட்டிருந்தது வைரலாகியது.

இதற்கிடையே காங்கிரஸ் கூறியுள்ள 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
போட்டோஷூட் மூலம் போராட்டம் செய்த மணப்பெண்!
டி20 தொடர் முதல் போட்டி: இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!