ஹெல்த் டிப்ஸ்: அதிகாலையில் வெந்நீர் அருந்துங்கள்… ஆரோக்கியமாக வலம் வரலாம்!

Published On:

| By Selvam

குளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். Benefits of Drinking Hot Water

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. ‘எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்’ எனச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம், நம் உடல் எதிர்கொள்ளும் பெரும்பான்மையான நோய்களுக்குக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை.

வெந்நீரோ, சூடான பொருளோ நம் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும்; உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது. இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.

எல்லா நேரமும் வெந்நீர் அருந்தலாம். இருப்பினும், அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது.

அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, வெந்நீருடன் கலக்கும். ஓசோன் என்பது, சூப்பர் ஆக்சிஜன். அது நம் உடலின் சக்தியைத் தூண்டிவிடும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்தால், செரிமானத்தைத் தூண்டும். போதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.

வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும். செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். நாள் முழுக்க ஆரோக்கியமாக வலம் வரலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share