பியூட்டி டிப்ஸ்: எண்ணெய் இல்லாத கூந்தல்… கருமையாக இருக்க காரணம் என்ன?

Published On:

| By Minnambalam Desk

நம்மில் பலர் பல ஆண்டுகளாகத் தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டார்கள். ஆனாலும் முடி கருமையாகவே இருக்கும். இதற்கான காரணம் என்ன?. எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது சரியானதா? அழகுக்கலை நிபுணர்கள் கூறும் பதில் என்ன?

“கூந்தல் என்பது ‘கெரட்டின்’ என்ற புரதத்தால் ஆனது. இந்தப் புரதம் நிறமற்றது. ‘ஹேர் ஃபாலிகிள்ஸ்’ எனப்படும் கூந்தலின் நுண்ணறைகளில் ‘மெலனோசைட்ஸ்’ எனப்படும் நிறமி செல்கள் இருக்கும். அவைதான் மெலனினை உற்பத்தி செய்பவை. அந்த மெலனின்தான் கூந்தலின் கருமைக்குக் காரணம். Benefits of applying oil to the head

வயதாக, ஆக மெலனின் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால்தான் கூந்தல் நரைக்கிறது. சிலருக்கு மெலனின் சுரப்பு குறையாமல் இருக்கும். அதனால் கூந்தல் கருமையாக இருக்கும். ஆனால், எண்ணெய் வைப்பதன் மூலம் கிடைக்கும் பல பலன்களை இவர்கள் இழந்துவிடுவார்கள்.

தலைக்கு எண்ணெய் வைப்பதும், எண்ணெய்க் குளியல் எடுப்பதும் காலங்காலமாகப் பின்பற்றப்படுகிற விஷயங்கள். முடி வளர்ச்சிக்கு மட்டுமன்றி, உடல் வலிமைக்கும் இவை அவசியம்.

எண்ணெய் வைத்துக் குளிப்பதால் கூந்தலின் வேர்க்கால்கள் தூண்டப்பட்டு நிறமி செல்களுக்கு ஊட்டம் அளித்து, முடி வளர்ச்சி தூண்டப்படும். ஆனால், இன்றைய பெண்கள் எண்ணெய் வைப்பதையும், எண்ணெய்க் குளியலையும் விரும்புவதே இல்லை.

ஆனால், கூந்தலுக்கு எண்ணெய் வைப்பதும் எண்ணெய்க் குளியல் எடுப்பதும், இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியம். வசதி, நேரமின்மை காரணமாக ஷாம்பூ குளியல் எடுத்து, கூந்தலின் பி.ஹெச் அளவைக் குறைத்துக் கொள்கிறோம். அதை ஈடுகட்ட எண்ணெய் தேய்ப்பது அவசியம்.

எண்ணெய்க் குளியல் என்பது மன அழுத்தத்தையும் குறைக்கும். தவிர பொடுகு, பூஞ்சைத் தொற்று போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும். வாரம் ஒரு முறையாவது தலையில் எண்ணெய் வைத்து அரை மணி நேரம் ஊறி, பிறகு ஷாம்பூ குளியல் எடுக்கலாம். அதனால் கூந்தல் வறட்சி தவிர்க்கப்படும்” என்று விளக்கமளிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share