பியூட்டி டிப்ஸ் : உங்களுக்கேற்ற ஷாம்பூ எது? 

Published On:

| By Kavi

“சிலருக்கு முடி மற்றும் ஸ்கால்ப் (Scalp) மிகவும் வறண்டு போயிருக்கும். இன்னும் சிலருக்கோ இவை இரண்டும் எண்ணெய்ப் பசையுடன் இருக்கும். எனவே, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பின் தன்மைக்கு ஏற்ப பொருத்தமான ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அப்போதுதான் முடி மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்’’ என்கிறார்கள் சருமநல நிபுணர்கள்.

மேலும் யார், என்ன வகையான ஷாம்பூவைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து அவர்கள் தரும் விளக்கங்கள் இங்கே…”உங்கள் தலைமுடிக்கான ஷாம்பூவைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, உங்கள் முடியின் தன்மையைப் பாருங்கள். முடி எண்ணெய்ப்பசைத் தன்மையுடன் இருந்தால், க்ளாரிஃபையிங் (Clarifying) ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள். இந்த ஷாம்பூவைக் கையில் ஊற்றிப் பார்த்தால், வெள்ளை நிறத்திலோ, க்ரீம் போலவோ இல்லாமல் மிகவும் தெளிவாக இருக்கும். தலையில் சேரும் அழுக்கை மிக ஆழமாகச் சென்று க்ளென்ஸ் பண்ணும் ஆற்றல் இந்த வகை ஷாம்பூவிற்கு உண்டு. இந்த க்ளாரிஃபையிங் ஷாம்பூவைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது முடி உலரலாம்.

எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல் மற்றும் எண்ணெய்ப்பசைத் தன்மையுள்ள ஸ்கால்ப் உள்ளவர்கள் இந்த வகை ஷாம்பூவால் தலையை அலசும்போது கட்டாயம் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு மிகவும் வறட்சியான கேசம் இருந்தால், தலைக்கு ஈரப்பதம் கொடுக்கக்கூடிய ஒரு ஷாம்பூவைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் கண்டிஷனர் பயன்படுத்தித் தலையை அலசலாம். அல்லது, கண்டிஷனிங் ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள். இதில் ஷாம்பூவிலேயே கண்டிஷனரும் சேர்ந்து இருக்கும்.

கூந்தல் எண்ணெய்ப்பசையுள்ளதாக இருந்தால், அல்லது வறட்சியாக இருந்தால் அதற்கு என்று இருக்கும் பிரத்தேக ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், உங்களுடையது எந்த வகையான முடியாக இருந்தாலும் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம். குறிப்பாக, பெண்கள் தங்கள் கூந்தலுக்கு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்.

ஷாம்பூ போட்டு தலையை அலசி முடித்த பிறகு கண்டிஷனரை லேசாக எடுத்து ஈரமான கூந்தலின் நுனிப் பகுதியில் அப்ளை செய்துவிட்டு, மிச்சமிருக்கும் கண்டிஷனரை லேசாக கேசத்தின் மேல்பகுதியில் தடவிவிட வேண்டும். ஸ்கால்ப்பில் படும்படி ஒரு போதும் கண்டிஷனரை போடக்கூடாது. பிறகு 3 முதல் 5 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு, தலையை முடியைத் தண்ணீரில் நன்கு அலச வேண்டும். நன்கு அலசவில்லையென்றால், பொடுகுத் தொல்லை இருப்பவர்களுக்கு அப்பிரச்னை அதிகமாகலாம். ஏனென்றால், கண்டிஷனரில் எண்ணெய் இருப்பதால், ஏற்கெனவே தலையில் பொடுகு இருப்பவர்களுக்கு பாதிக்கப்பட்ட இடத்தில் பூஞ்சை வளர்ச்சி அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

மிகவும் வறண்ட கேசம் கொண்டவர்கள் வாரம் ஒரு முறை, ஷாம்பூ போடாமல் கண்டிஷனரை மட்டும் பயன்படுத்தலாம். ஈர முடியில் கண்டிஷனரைத் தடவி (ஸ்கால்ப்பில் படாமல்) அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர் தண்ணீரில் முடியை அலசுங்கள். இதற்கு கோ-வாஷ்(Co-Wash).. அதாவது கண்டிஷனர் வாஷ் என்று பெயர். மிகவும் வறண்ட மற்றும் பறக்கும் (Frizzy) முடி உள்ளவர்களுக்கு இது ஓரளவுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.

தினமும் ஷாம்பூ போட்டுக் குளிக்கக் கூடாது. இயற்கையாகவே நமது ஸ்கால்ப்பில் எண்ணெய் ஒன்று சுரக்கும். தினமும் ஷாம்பூ போடும்போது இயற்கையாகச் சுரக்கும் இந்த எண்ணெயை அது வெளியேற்றிவிடும். முடியை கொஞ்சம் மென்மையாக வைத்துக்கொள்ள இந்த இயற்கை எண்ணெய் மிகவும் தேவை என்பதால் தினமும் ஷாம்பூ போடுவதைத் தவிர்க்கலாம். எண்ணெய்ப்பசையுள்ள கூந்தல் உள்ளவர்கள்கூட, தினமும் ஷாம்பூ பயன்படுத்தாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் பயன்படுத்துங்கள். எல்லா நாள்களுமே தலைக்குக் குளிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள், ஒரு நாள் வெறும் தண்ணீரில், அடுத்த நாள் ஷாம்பூ பயன்படுத்தி எனக் குளிக்கலாம். குறிப்பாக, ஜிம்முக்குச் செல்பவர்கள் தினமும் தலைக்குக் குளிக்க நினைத்தால், இப்படிக் குளிக்கலாம்’’ என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : பாலக் பாஸ்தா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment