கரியும் உப்பும் கொண்டு பல் துலக்கியவர்களை, ‘பல்லு வெளக்க உப்பா’ என்று கேலி செய்தது ஒரு காலம். ‘உங்க டூத்பேஸ்ட்டுல உப்பிருக்கா’ என்று கரிசனப்படுவது இந்தக் காலம்.
மண்ணில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை `சொறி, சிரங்கு வரும்’ என்று கண்டித்து வீட்டுக்குள் அடைத்தோம். இப்போதோ, சுத்தமான மண்ணில் கால்களை வைத்திருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று மண்ணை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
‘மண், மனிதர்களுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது’ – இந்த உழவர் திருநாளில் இயற்கை மருத்துவர்கள் சொல்வதென்ன?
“மண்ணுக்கும் மனிதர்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அதனால்தான், மண்ணைப் பயன்படுத்திச் செய்யப்படுகிற சிகிச்சைகளுக்கு இயற்கை மருத்துவம் மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. செம்மண், களிமண், கறுப்பு மண், புற்று மண், மணல் என மண் பல வகைப்படும் என்றாலும், இயற்கை மருத்துவத்தில் தாது உப்புக்கள் அதிகமிருக்கிற கறுப்பு மண், களிமண், புற்று மண் மூன்றையும்தான் பயன்படுத்துவோம்.
குழந்தைகளுக்கு வைட்டமின் `டி’ குறைபாட்டால் கால் வளைந்திருந்தால், அதைச் சரி செய்வதற்குக் கடற்கரை மணலில் காலை புதைத்து வைக்கச் சொல்வார்கள் மருத்துவர்கள். இப்படிப் புதைத்து வைக்கும்போது, தசைகள் வலுப்படும். நரம்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். எலும்புகளின் வளர்ச்சியும் தூண்டப்படும்.
உடலில் கழிவுகள் தங்கும்போது உடல் சூடாகும்; நோய்களும் வரும். மண் குளியல் செய்தால் உடலின் சூடு தணியும். சரும அடைப்புகள் நீங்கி, வியர்வை வழியாகக் கழிவுகள் வெளியேறும். தவிர, உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
விவசாயிகள் சின்னச் சின்ன காயங்களுக்கு மண்ணைத்தான் பூசிக்கொள்வார்கள். காயங்களை ஆற்றும் தன்மையும் மண்ணுக்கு உண்டு.
மண்ணில் கால்பட நடந்தபோது, பெரும்பான்மையானவர்களுக்குக் குதிகால் வலி இல்லை. செல்லும் இடமெல்லாம் டைல்ஸ், மார்பிள்ஸ் என்று மாறிய பிறகுதான் இந்தப் பிரச்சினை அதிகம் வர ஆரம்பித்தது. மண்ணில் பாதம்பட நடந்தால், பாதத்திலிருக்கிற நரம்புகள் தூண்டப்பட்டு உடல் முழுக்க புத்துணர்ச்சிக் கிடைக்கும்.
கடற்கரைக்குச் சென்றாலே மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சிக் கிடைக்கும். மணல், தண்ணீர், ஜில்லென்ற காற்று ஆகியவைதான் இதற்குக் காரணம். பீச் மண்ணில் நடக்கும்போது, பாதங்களின் பக்கவாட்டிலும் அழுத்தம் கிடைப்பதால், ஆரம்பகட்ட இடுப்பு வலி, முதுகு வலி ஆகியவை சரியாகும். தவிர, பாதத்திலிருக்கிற புள்ளிகள் தூண்டப்பட்டு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
பாட்டி காலத்தில், ஆற்றின் ஆழத்திலிருந்து மண்ணெடுத்து தலையில் தேய்த்துக் குளிப்பார்கள். கூந்தலை அழுக்கு நீக்கி மென்மையாக்கும் தன்மை மண்ணுக்கு உண்டு. களிமண்ணுடன், முல்தானி மிட்டி, பன்னீர் சேர்த்து உடம்பில் தேய்த்துக்குளித்தால் சரும பிரச்சினைகள் சரியாகும்.
மனிதர்கள் நோயில்லாமல் வாழ்வதற்கு மண்ணும் உதவி செய்யும். ஆனால், சற்று ஆழத்திலிருந்து எடுத்த மண்ணைப் பயன்படுத்தினால்தான் மேலே சொன்ன அத்தனை பலன்களும் கிடைக்கும்” என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
”ஆபத்தில் இந்திய திரைத்துறை” : வெற்றிமாறன்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!