பியூட்டி டிப்ஸ்: பல் சொத்தையைத் தடுக்க எளிய வழி!

Published On:

| By christopher

Simple way to prevent tooth decay

பொங்கல் திருநாளில் முக்கிய இடம்பிடிப்பது கரும்பு. இந்த கரும்பைக் கடிக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் பலருண்டு. அதற்கு முக்கிய காரணம்  பல் சொத்தை (Tooth Decay). குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என எல்லோரையும் இது பாதிக்கிறது. இந்த பல் சொத்தையைத் தடுக்க எளிய வழிகள் இதோ…

காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடைப் பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.

ஃபுளூரைடு கலந்த அனைத்து வகைப் பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் ஏற்பட்டால், அப்போது மட்டும் ‘டிசென்சடைசிங்’ பற்பசையைப் பயன்படுத்தலாம்.

பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது.

கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.

பல் துலக்கியைப் பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல் துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது.

ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான ‘விரல் பல்துலக்கி’யைப் பயன்படுத்தி, ஐந்து வயது வரையிலும் குழந்தைகளுக்குப் பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும்.

குழந்தைக்குப் பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.

தினமும் ஒரு கேரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.

வைட்டமின் – சி, வைட்டமின் – டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.

பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச் சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.

வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால், பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.

குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கிப் பற்களையும் சிதைக்கின்றன.

குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், சிறு வயதிலேயே அதைத் தடுத்து விட வேண்டும். தவறினால், சொத்தைப் பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.

தினமும் பால் அருந்துங்கள். அதிலுள்ள கால்சியம் பல்லுக்குப் பாதுகாப்பு தரும்.

நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டுபண்ணும்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தைப் பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.

அடுத்த பொங்கலுக்குள் நீங்கள் கரும்பை ருசித்து மகிழலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

சார்வாகர் கூறும் தேசியத்தின் உண்மைகளும், பொய்களும் – அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி அளித்துள்ள அபூர்வ நூல்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணிராதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share