சருமத்தின் அழகைக் கூட்ட எத்தனையோ நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. ஆனாலும், இயற்கையாக நமக்கு கிடைக்கும் பாரம்பரிய பொருட்களால் வரும் அழகு, பக்க விளைவுகள் இல்லாமல் நம்மை பாதுகாக்கும். எளிமையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி அழகை மேம்படுத்தும் வழிகள் இதோ…
மஞ்சள்
மஞ்சள் கிருமி நாசினி என்பதைத் தாண்டி முகம், கை, கால்களில் தேவையற்ற ரோம வளர்ச்சியைத் தடுக்கிறது.
அலர்ஜி, அரிப்பு என சருமம் சம்பந்தமான நோய்களிலிருந்து காக்கும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் மஞ்சள்தூளை அப்படியே உபயோகிக்காமல் மோர் அல்லது தயிருடன் சேர்த்துப் பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெறும். நலங்கு மாவில் மஞ்சள் சேர்த்து அரைத்திருந்தாலும் மோர் அல்லது தயிருடன் கலந்து பயன்படுத்தலாம்.
கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் மஞ்சள் தூளில் அதன் நிறத்தை அதிகரிக்க கலப்படம் செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே மஞ்சள் தூளின் தரத்தைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும். கூடுமானவரை நேரடியாக விவசாயிகளிடமிருந்து மஞ்சளாக வாங்கி, உலர்த்தி, அரைத்துப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது.
தயிர்
தயிரில் பல வகையான ஊட்டச்சத்துகள் இருப்பதால் அதை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தயிரை சருமத்தில் தடவும்போது அதில் இருக்கக்கூடிய நீர்த்துவம் சிறந்த மாய்ஸ்ச்சரைசராக செயல்பட்டு, சரும வறட்சியை நீக்கும்.
தயிருடன் கேரட், பப்பாளி போன்றவற்றைக் கலந்து ஃபேஸ் பேக்காக உபயோகித்தால் முகம் தங்கமாக மின்னும்.
கற்றாழை
கற்றாழையின் சதைப்பகுதியை உடலின் வெளிப்புற மற்றும் உட்புற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
வாரத்தில் ஒரு நாள் உடம்பு முழுவதும் இதைத் தேய்த்துக்குளித்தால் உடல் சூடு நீங்கி குளிர்ச்சி அடையும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் மாய்ஸ்ச்சரைசர் போன்று தினமும் பயன்படுத்தலாம்.
சந்தனம்
சந்தனக் கட்டைகளை வாங்கி சிறிது தண்ணீர் சேர்த்து இழைத்து முகத்தில் பூசி வந்தால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். பித்தம் நீங்கும்.
சந்தனம் போலவே அகில் கட்டையும் மருத்துவ குணம் வாய்ந்தது. தலைக்குக் குளித்தவுடன் கூந்தலில் இருக்கும் நீரோட்டத்தைப் போக்க அகில் கட்டை புகை பயன்படும்.
வேப்பிலை
வேப்பிலையில் நோய் எதிர்ப்புத்தன்மை இருப்பதால் அம்மை நோய் வந்தவர்கள் பயன்படுத்துவார்கள். தற்போது கிடைக்கும் பல்வேறு குளியல் சோப்புகளில் இதன் சாரங்களைப் பிரித்தெடுத்துச் சேர்த்துத் தயாரிக்கிறார்கள். வேப்பிலையைக் காயவைத்து பொடித்து கடலை மாவு, மஞ்சள் போன்ற பொருள்களுடன் சேர்த்துக் குளிக்கலாம்.
நான்கு வேப்பிலையைப் போட்டுக் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரில் தினமும் குளிப்பது சரும நோய்களை விரட்டும். இது எல்லா பருவ நிலைகளுக்கும் பொருந்தும். காயம்பட்ட இடத்தில் வேப்பிலையை அரைத்துத் தடவினால் விரைவில் குணமாகும்.
தேன்
சருமத்துக்குப் பயன்படுத்தப்படும் எல்லா மூலிகைகளுடனும் சில துளிகள் தேன் கலந்து பயன்படுத்தலாம் அல்லது நேரடியாக பருக்கள் இருக்கும் இடங்களில் தேனை அப்ளை செய்து காயவைத்தால் நல்ல பலன் தெரியும்.
நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!