கோடை தொடங்குகிறது… கல்லூரி, அலுவலகம், ஷாப்பிங் எனப் பொது இடங்களுக்குச் செல்லும்போது வியர்வை துர்நாற்றம் வீசாமல் இருக்க டியோடரண்ட் (Deodorant), பாடி ஸ்பிரே (Body Spray) பயன்படுத்துவோம். இவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும், ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்துமா, கவனமாகப் பயன்படுத்த வேண்டுமா உள்ளிட்டவை குறித்து விளக்குகிறார்கள் நுரையீரல் மருத்துவர்கள். beauty tips feb 18
”உடலிலிருந்து வெளியேறும் வியர்வை துர்நாற்றத்தைப் போக்கவே டியோடரண்ட், பாடி ஸ்பிரே இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டிலும் பயன்படுத்தப்படும் ரசாயனங்களில் மாறுபாடு காணப்படும். பொதுவாக டியோடரண்ட் குறைந்த வாசனையுடனும், பாடி ஸ்பிரே அதிக வாசனையுடனும் இருக்கும். இவற்றைக் குறைந்த அளவு பயன்படுத்தும்போது பாதிப்புகள் ஏற்படாது.
எது குறைந்த அளவு என்பதை சரியாக அளவிட முடியாது. காரணம், ஒவ்வொரு திரவத்தின் செறிவும் (Concentration) வேறு வேறாக இருக்கும். மேலும், ஒவ்வொரு நபருக்கும் சகிப்புத் திறன் (Tolerance Capacity) வேறுபடும். சிலருக்கு ஒருமுறை பயன்படுத்தினாலே போதும் என்று தோன்றும். சிலர் அதிக அளவு பயன்படுத்துவார்கள்.
டியோடரண்ட், பாடி ஸ்பிரே போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது, அந்தப் பகுதியில் எரிச்சல் உணர்வு, தோலில் அரிப்பு போன்றவை ஏற்படலாம். மேலும், அவற்றில் இருக்கும் அதீத நறுமணம் ரத்த நாளங்களை விரிவுபடுத்தும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி தலைவலி ஏற்படும். இதனால்தான் பயன்படுத்தியவருக்கு அருகில் இருப்பவர்களும், இந்த நறுமணத்தால் சில நேரங்களில் தலைவலியை உணர்வார்கள்.
எனவே, குறைவான அளவு பயன்படுத்துவது அவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருப்பவர்களுக்கும் நல்லது. அடிக்கடி இவற்றைப் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் பயன்படுத்துவது நல்லது. அக்குள், மணிக்கட்டு, கழுத்துப் பகுதி போன்ற பகுதியில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். சருமம் தவிர, வாய், மூக்கு, கண் போன்ற இடங்களில் படக்கூடாது. வாய், கண் போன்றவற்றில் படும்போது எரிச்சலுணர்வு, இருமல், புண், மூச்சுத்திறணல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
டியோடரண்ட், பாடி ஸ்பிரே போன்றவற்றை கண், வாய் போன்ற இடங்களில் பயன்படுத்தினால் இதுபோன்ற அறிகுறிகள் உடனே தெரிந்துவிடும். அறிகுறிகள் நீடித்தால் உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவரை அணுக வேண்டும். சிலருக்கு தலைவலி மட்டுமே நீடிக்கும். அது தாங்க முடியாத அளவு இருந்தால் மருத்துவரை அணுகலாம்.
முக்கியமாக… நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். முகத்தில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடாது. இதுபோன்ற திரவங்களைப் பயன்படுத்திய பின்னர் கைகளை நன்கு கழுவ வேண்டும். குழந்தைகளிடமிருந்து இவற்றை விலக்கி வைக்க வேண்டும். அலர்ஜி போன்ற எதிர்விளைவுகள் ஏற்பட்டால், பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது” என்று அறிவுறுத்துகிறார்கள்.