கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை தாக்கிய வழக்கில் சிறையில் உள்ள நடிகை சப்னா கில்லுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை மும்பையில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலுக்குச் சென்ற கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுடன், இன்ஸ்டா பிரபலமும், போஜ்புரி நடிகையுமான சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.
முதல் 2பேர் செல்பி எடுத்துவிட்டுச் சென்றவுடன் மேலும் சிலர் வந்து புகைப்படம் எடுக்க கேட்டிருக்கின்றனர். அதற்கு பிரித்வி ஷா, நண்பருடன் சாப்பிட வந்திருக்கிறேன், தொந்தரவு செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனால் சப்னா கில்லும், அவரது நண்பர்களும், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பிரித்வியின் காரை பேஸ்பால் மட்டையால் தாக்கியுள்ளனர்.
மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் பிரித்வி ஷாவின் நண்பர் அளித்த புகாரின்படி, ஜோகேஸ்வரி லிங்க் ரோடு அருகே காரை துரத்திச் சென்ற அவர்கள், வாகனத்தை நெருங்கி பேஸ்பால் மட்டையால் காரை சேதப்படுத்தியுள்ளனர். காரின் கண்ணாடியை உடைத்ததுடன், ரூ. 50,000கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய தண்டனைச்சட்டம் 143(சட்டவிரோத கூட்டம்), 148(கலவரம்), 384(பணம் பறித்தல்) மற்றும் 506(குற்ற மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் சப்னா கில், அவரது நண்பர் சோபித் தாக்கூர் மற்றும் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சப்னா மற்றும் மூன்று குற்றவாளிகள் நீதிமன்றத்தால் 14நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். சப்னா கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இன்று(பிப்ரவரி 20) சப்னா கில் அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரது வழக்கறிஞர் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீண்ட வாதங்களுக்குப் பிறகு சப்னா கில்லுக்கு ஜாமின் வழங்கியது.
இந்த ஜாமின் மும்பை சிறையில் நாளை சமர்பிக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் அலி கஷீப்கான் தேஷ்முக் கூறியுள்ளார்.
கலை.ரா
மீனவர் விவகாரம்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
உலக சாதனை படைத்த ஹர்மன்ப்ரீத்: ரோஹித்தின் சாதனையும் முறியடிப்பு!