திருவாரூர் மாவட்டத்தில், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுப்பதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வின்னர் படம் வடிவேலு ஸ்டைலில் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.
வடிவேலுவின் நகைச்சுவை என்றாலே அனைவரது மனதிலும் பதிந்து விடும். பலர் தங்கள் நண்பர்களை கலாய்க்க வடிவேலுவின் நகைச்சுவை வாக்கியத்தை அதிகளவு பயன்படுத்துவார்கள்.
வின்னர் படத்தில் வடிவேலு கைப்புள்ளை என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் வடிவேலு, கட்டதுரையிடம் (ரியாஸ் கான்) அடி வாங்காமல் இருப்பதற்காக தரையில் ஒரு கோட்டை போட்டு “இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்” என்று பயம் கலந்த தைரியத்துடன் ஸ்டைலாக கூறியிருப்பார். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் மக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு ஸ்டைலில் நகராட்சி சார்பில் வடிவேலுவை பயன்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.
அதில் “இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது! நானும் வர மாட்டேன்!” என்று குறிப்பிடப்பட்டு வடிவேலுவின் கைப்புள்ள புகைப்படத்துடன் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.
இது மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் பேசு பொருளாகி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் டிரண்டிங்காகி வருகிறது. ரசிப்பதோடு நின்றுவிடாமல் வடிவேலு வழி நின்று பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருக்க வேண்டும்.
மோனிஷா