துப்பாக்கி சண்டை: ராணுவ வீரரை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த நாய்!

Published On:

| By christopher

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் இருந்து பாதுகாவலரை பாதுகாத்து விட்டு ராணுவ மோப்ப நாய் உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலின்போது, தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி படை வீரர்கள் துரத்தி சென்றனர். அவர்களுக்கு முன்னால், லேபரடார் வகையை சேர்ந்த ராணுவத்தின் பெண் மோப்ப நாய் கென்ட் (வயது 6) சென்றுள்ளது. அப்போது, பயங்கரவாதிகளின் திடீர் துப்பாக்கி சூட்டின்போது, கென்ட் முன்னே பாய்ந்து உயிரிழந்தது.

தன்னுடைய பாதுகாவலரை பாதுகாக்கும் வகையில் அது உயிர் தியாகம் செய்துள்ளது. இதனால், அதற்கு பின்னால் வந்து கொண்டிருந்த ராணுவ வீரர்கள் உயிர் தப்பினர் என்று ஜம்மு பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராணுவ மோப்ப நாய் கென்ட் உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment