போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் சிலர் முதலில் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு நிற்பார்கள். இல்லை என்றால் கைகளை வயிற்றின் மேல் வைத்துக்கொண்டு நிற்பார்கள். இவை எல்லாம் தொப்பையை மறைப்பதற்கான டெக்னிக்ஸ். இந்த நிலையில் தளர்ந்த வயிறு, தோற்றப்பொலிவைக் குறைப்பதால் அதை மறைக்க அலுவலகம் செல்லும் பலருக்கு பெல்ட் அணியும் பழக்கம் இருக்கும். இப்படி ஆடையின் நேர்த்திக்காகவும், அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காகவும் பெல்ட் அணிவது பரவாயில்லை. ஆனால், சந்தையில் விளம்பரப்படுத்தப்படும் பெல்ட்களை 24 மணி நேரமும் இறுக்கமாக அணிவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயல்தானே தவிர, உடல்நலத்துக்கு நல்லதல்ல.
உதாரணத்துக்கு, தொப்புளுக்கு மிக அருகில் இறுக்கமாக பெல்ட் அணிவது வயிற்றில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக உணவை ஜீரணிப்பதற்காக வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் அதன் வரம்பைக் கடந்து நுரையீரல் மற்றும் தொண்டையை அடையும். இதனாலேயே இறுக்கமான பெல்ட் அணிபவர்களுக்கு நெஞ்செரிச்சல், அஜீரணம், மலச்சிக்கல், செரிமான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும். மேலும், இறுக்கமான பெல்ட்டுகளை அணிவதால் குடல் இறக்கம் போன்ற கடுமையான நோய்க்கும் ஆளாகலாம்.
பெல்ட்டை வயிற்றுக்கு மிகவும் கீழே இறக்கி இறுக்கமாக அணியும் பழக்கம் சிலருக்கு உண்டு. இதனால் முதுகெலும்பில் ஆரம்பித்து பக்கவாட்டாக வளைந்து செல்லும் ‘எரெக்டடார் ஸ்பைன்’ (Erector spinae) என்ற நரம்பு பாதிக்கப்பட்டு முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர, இடுப்பைச் சுற்றியுள்ள அழுத்தம் காரணமாக கால்களிலும் வீக்கம் ஏற்படலாம். மேலும், தொடையில் வீக்கம், மரத்துப்போதல் போன்ற பிரச்னைகளும் உண்டாகும்.
அடுத்து, நீண்ட நேரம் இறுக்கமான பெல்ட்களை அணிவது இடுப்புப் பகுதியில் அழுத்தத்தை உருவாக்கும். இனப்பெருக்கத்துடன் தொடர்புடைய முக்கிய உறுப்புகள் அங்கு உள்ளன. அந்த இடம் தொடர்ந்து இறுக்கப்படும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறாமை அபாயத்தை அதிகரிக்கும். மேலும், காற்று சரியாக அந்தரங்க உறுப்புகளுக்குச் செல்லாமல், உடல் வெப்பநிலை அதிகரித்து விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறையும்.
குழந்தை பிறந்த பிறகு பெண்கள் பலருக்கு தொப்பை பிரச்னை வருவது இயல்புதான் என்றாலும் அந்தக் காலத்தில் பிரசவமானதும் பெண்களுக்கு, நல்ல காட்டன் துணியை வைத்து இறுக்க வயிற்றைக் கட்டும் பழக்கம் இருந்தது. தற்போது ‘மெட்டர்னிட்டி பெல்ட்’ அணிந்து கொள்ளும் வழக்கம் பரவலாகி வருகிறது. இது தளர்ந்த வயிற்றுப்பகுதி தசைகள் மற்றும் உறுப்புகளைத் தாங்கிப்பிடிக்கும்படி போடப்படுகிறது. இதனால் அந்தத் தசைகள் இறுக்கமடைந்து தொப்பை வயிற்றை கொஞ்சம் உள்ளே தள்ளச் செய்கிறது. ஆனாலும், பெண்கள் பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் துணி கட்டுவது, பெல்ட் அணிவது மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உபயோகிக்க வேண்டும்.
கடல் அலைக்கு எப்படி ஓய்வே இல்லையோ… அதைப்போலதான் குடலுக்கும். கடல் அலையில் அதீத சீற்றமோ, உள்வாங்கும் தன்மையோ இருந்தால், அது ஏதாவது இயற்கை பேரிடர் ஏற்படவிருக்கிறது என்பதற்கான அறிகுறி என்பார்கள். அதேபோல்தான் குடலின் இயக்கம் அதிகமானாலோ… அல்லது நின்றுபோனாலோ வயிற்று உபாதைகள் உண்டாகின்றன என அர்த்தம். குறிப்பாக, இடுப்பில் தடிமனான ஒன்றை நீங்கள் அணியும்போது, உங்கள் வயிற்றில் இருந்து அதிக வியர்வை ஏற்படும். இது தற்காலிகமாக தண்ணீரின் எடையைக் குறைக்கும். உண்மையில், இந்த பெல்ட்களை அணிவதன் மூலம் நீங்கள் இழப்பது கொழுப்பை அல்ல, உடம்பில் இருக்கும் கூடுதல் தண்ணீர் எடையை மட்டுமே.
மேலும், நம்முடைய அடிவயிறும் இடுப்புப் பகுதியும்தான் அதிகபட்சமாக கொழுப்பு சேரும் பகுதிகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட பெல்ட் அணிவதால் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைப்பதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால், இதுவும் சாத்தியமில்லை. ஏனென்றால் நமது உடல் சேமித்துள்ள கொழுப்பை ஒட்டுமொத்த விகிதத்தில் உடல் எரிக்கிறதே தவிர, ஓரிடத்தில் மட்டும் எரிக்கும் என்கிற வகையில் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, இறுக்கமான பெல்ட் அணியும்போது உடலின் முக்கியமான இணைப்பு பகுதியான அடிவயிற்றை அழுத்துகிறது. இதனால் அந்தப் பகுதி வழியாக மூளைக்குச் செல்லும் முக்கியமான நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உங்களுடைய உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல… மன ஆரோக்கியமும் பல வழிகளில் நேரடியாக பாதிக்கப்படும்” என்கிறார்கள் குடல் மற்றும் இரைப்பை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆகஸ்ட் 31-ல் ரேஷன் கடைகள் இயங்குமா? வெளியான முக்கிய அப்டேட்!
நிதி நிறுவன மோசடி வழக்கு… தேவநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி!
‘வாழை’… வீடு தேடிச்சென்ற திருமா… விமர்சிக்கும் கிருஷ்ணசாமி
வாழை கதை திருடப்பட்டதா? : எழுத்தாளர் சோ. தர்மன் போடும் பகீர் குண்டு!