ஆடி மாதம் பிறந்துவிட்ட நிலையில் அம்மனுக்காக விரதம் இருப்பவர்கள் பலர். இந்த நிலையில், “விரதமிருப்பதற்கு என்னதான் பலன்கள் இருந்தாலும் சிலருக்கு அது ஏற்றதல்ல.
அதன்படி நீங்கள் கீழ்க்குறிப்பிட்ட பிரிவுகளில் வருபவர் என்றால் விரதம் இருக்கவே கூடாது” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
“வளரும் குழந்தைகள் விரதம் இருக்கவே கூடாது. அந்த வயதில் அவர்களுக்கு நிறைய கலோரிகள் தேவைப்படும், விரதமிருப்பதன் மூலம் அது தடைபடும். அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் குழந்தைகள் விரதமிருப்பதை ஊக்கப்படுத்தாதீர்கள்.
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சினை பலருக்கும் இருக்கும். அவர்கள் விரதம் என்ற பெயரில் சாப்பிடாமல் இருப்பதால் ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து, அதன் விளைவாக மைக்ரேன் பாதிப்பு இன்னும் அதிகமாகும். எனவே, அவர்களுக்கும் விரதம் ஏற்றதல்ல. கர்ப்பிணிகளும் விரதம் இருக்கக் கூடாது.
எதைச் சாப்பிட்டாலும் அசிடிட்டி எனப்படும் அமிலம் எதுக்களிக்கும் பிரச்சினையால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். பாட்டில் பாட்டிலாக செரிமானத்துக்கான ஆன்டாசிட் மருந்துகள் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கும் விரதம் என்பது ஏற்றதல்ல.
ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நீரிழிவு பாதித்தோரும் விரதம் இருக்கவே கூடாது. நீரிழிவு, இதயநோய்கள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி, உணவு விஷயத்தில் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமலிருப்பதுதான் சரி. குறிப்பாக, நீரிழிவு பாதித்தோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது.
சராசரியைவிட குறைவான உடல் எடை கொண்டவர்களுக்கும் விரதம் தேவையில்லை. உடல் எடையை அதிகரிக்க வேண்டும், தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்போருக்கு விரதம் ஏற்புடையதல்ல.
விரதம் இருப்பது என முடிவெடுத்தால், அதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உங்கள் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையில் அவர் சொல்லும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
உடல்நலக் கோளாறுகளுடன் விரதமிருக்கும்போது, விரதத்தால் பலன்கள் கிடைப்பதற்கு பதில் ஆரோக்கிய பிரச்சினைகளே அதிகரிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல் ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர் வரை!
சண்டே ஸ்பெஷல்: இடியாப்பம்… இப்படிச் செய்து பாருங்கள்… ஈஸியா வரும்!
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி வீட்டில் நடந்தது என்ன? போட்டுடைத்த நத்தம், வேலுமணி
அங்கேயும் ஃபேக் ஐடியா? : அப்டேட் குமாரு