பியூட்டி டிப்ஸ்: உடல்பருமனைப் பற்றி கவலைப்படாதவரா நீங்கள்?

Published On:

| By christopher

சிலர் சராசரியைவிட அதிக உடல் பருமனுடன் இருப்பார்கள். அவர்களுக்கு ரத்த அழுத்தமோ, நீரிழிவோ, வேறு பிரச்சினைகளோ இருக்காது. இந்த நிலையில் ‘ஆரோக்கியமாக இருக்கும் நான் ஏன் உடல் எடையைக் குறைப்பது குறித்துக் கவலைப்பட வேண்டும்’ என்று நினைப்பார்கள். இது சரியா? டயட்டீஷியன்கள் சொல்லும் பதில் என்ன?

“உடல் பருமன் என்பதே ஒருவகையான வளர்சிதை மாற்ற பிரச்சினைதான். ஒருவருக்கு இப்போது வேண்டுமானால் எந்தப் பிரச்சினையும், உடல்நல பாதிப்புகளும் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், உடல் பருமன் காரணமாக இனி வரும் நாள்களில் அவருக்கு நிச்சயம் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

பொதுவாகவே, உடல் பருமன் பாதிப்புள்ளவர்களுக்கு எப்போதும் ஒருவித களைப்பு, கை, கால் வலி, மூச்சு வாங்குதல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

உடல் பருமனுடன் நீரிழிவோ, ரத்த அழுத்தமோ இருந்தால்தான் பிரச்சினை என்று நினைக்காமல், இப்படிப்பட்ட சின்னச் சின்ன அறிகுறிகளையும் அவர்கள் கவனிக்க வேண்டும். வருடத்துக்கொரு முறை ரத்தப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

ஒருவர் அவரது உயரத்துக்கேற்ற உடல் எடையில் இருக்கிறாரா என்பதை பிஎம்ஐ (BMI) எனப்படும் அளவீட்டின் மூலம் கண்டறியலாம்.

அந்த வகையில் இந்த நபர் தனது பிஎம்ஐ அளவைத் தெரிந்துகொண்டு, அதில் உடல் பருமன் என வந்தால், உடனடியாக எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும். அவரின் உயரத்துக்கேற்ற எடைக்குத் திரும்பும் வழிகளை யோசிக்க வேண்டும்.

வயதாக, ஆக நம் உடலின் வளர்சிதை மாற்றமானது மந்தமாகத் தொடங்கும். எனவே, இப்போது பிரச்சினை தராத உடல் பருமனும், வளர்சிதை மாற்றத்தின் மந்தத் தன்மை காரணமாக நிச்சயம் அடுக்கடுக்கான பிரச்சினைகளைக் கொடுக்கும். எனவே, உடல் பருமனைக் குறைக்க வேண்டியது அவசியம்.

எதிர்கால ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இதைச் செய்துதான் ஆக வேண்டும். முறையான ஊட்டச்சத்து ஆலோசகரிடம் கலந்தாலோசியுங்கள்.

அவர் உடலின் தசை மற்றும் கொழுப்பு அளவுகளைக் கணக்கிட்டு அவருக்கான சரியான எடைக்குறைப்புத் திட்டத்ததையும், உணவுக்கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் ஊட்டச்சத்து ஆலோசகர் பரிந்துரைப்பார்.

கூடவே, ஃபிட்னஸ் பயிற்சியாளரின் ஆலோசனையையும் பெற்று உடற்பயிற்சிகளையும் செய்யத் தொடங்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் சேரும்போது நிச்சயம் உடல் எடையில் மாற்றம் தெரியும்.

எனவே, ஆரோக்கிய மாகத்தானே இருக்கிறோம் என்ற அலட்சியத்தில் உடல் பருமனை சாதாரணமாக நினைத்துக் கடந்து போக வேண்டாம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மாங்கொட்டை ரசம்

ஸ்டாலினை வாழ்த்திய அமித் ஷா- காரணம் என்ன?

2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி : அண்ணாமலை

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: கேசவ விநாயகம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel