ஹெல்த் டிப்ஸ்: பனிப்பொழிவு… அதிகாலை வாக்கிங் செல்பவரா நீங்கள்?

Published On:

| By Kavi

வாக்கிங் செல்வது என்பது இன்று பலருடைய அன்றாட வழக்கமாக மாறிவிட்டது. ஆனால், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் போகி பண்டிகைக்குப் பிறகு காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பனிக்காலத்தில் வாக்கிங் செல்வதை தவிர்க்க வேண்டாம் என நினைப்பவர்கள் காதுகளை மூடிக் கொள்ள வேண்டும். மஃப்ளர், ஸ்கார்ஃப் போன்றவற்றைப் பயன்படுத்தி காதுகளை மூடிக் கொள்ளலாம். சிலர் மாஸ்க் அணிந்து வாக்கிங் செல்கின்றனர். வாக்கிக், ஜாகிங் செல்லும்போது மிகவும் அடர்த்தியான N-95 போன்ற மாஸ்க்குகளை அணிந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும். எனவே, ஒற்றை அடுக்குள்ள மெலிதான மாஸ்க் அணிந்து கொள்ளலாம். அந்த மாஸ்க் அணிந்தாலும் சுவாசம் முட்டுவது போல தோன்றினால் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த சீசனில் வரும் தொற்றுகள், ஒவ்வாமை அனைத்தும் காது – மூக்கு – தொண்டை ஆகிய இடங்களையே முதலில் பாதிக்கும். பனியில் அதிக நேரம் இருக்கும்போது செவிப்பறையில் தொற்று (Eardrum infection), காது வலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை வலி, சளித் தொந்தரவு போன்றவை ஏற்படலாம். சிறிய அறிகுறிகள் தோன்றினால் அதைப் பொருட்படுத்தாமல் பனியில் வாக்கிங் செல்லக்கூடாது. இரண்டு, மூன்று நாள்கள் வாக்கிங் செல்வதைத் தவிர்த்துவிட்டு, அறிகுறிகள் குறைந்த பிறகு செல்லலாம்.

ஏற்கெனவே ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான பிரச்சினை உடையவர்கள் பனி அதிகமாக இருக்கும் நேரத்தில் வாக்கிங் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டுக்குள் இருந்து செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். பனி பொழியும் நேரத்தில் வெளியே செல்லும்போது பிரச்னையை மேலும் தீவிரமாக்கலாம்.

பனிக்காலத்தில் குழந்தைகளும், முதியோரும்தான் எளிதில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் வெளியில் செல்லும்போது காதுகளை மூடியபடி செல்ல வேண்டும். அதே போல எளிதில் சளித் தொந்தரவால் பாதிக்கப்படும் நபர் என்றாலும் வெளியில் செல்லும்போது காதுகளை மூடிக்கொள்ள வேண்டும்” என்று நுரையீரல் சிகிச்சை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel