”எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்’ இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம்.
எனவே வைட்டமின் மாத்திரைகளைக் குறைத்து நம் உணவின் மூலமே நமக்குத் தேவையான சத்துகளைப் பெறலாம் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
உதாரணத்துக்கு… “வைட்டமின் ஏ குறையும்போது, பார்வை மங்குதல், மாலைக் கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேரட், பப்பாளி, மஞ்சள் நிற குடமிளகாய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் கீரை இவற்றை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாட்டைத் தவிர்க்கலாம்.
பி வைட்டமின்களில் பல வகைகள் உள்ளன. இதில், பி12 மற்றும் பி9 (ஃபோலிக் ஆசிட்) இரண்டும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கு மிக முக்கியமானவை. இவற்றின் குறைபாட்டினால் ரத்த சோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படலாம். இதைத் தடுக்க, முட்டை, இறைச்சி, சம்பா கோதுமை, முட்டைக்கோஸ், கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா கதிர்களினால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் டி, எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் கிடைப்பதற்குத் தேவை. சூரிய ஒளி அதிக அளவில் கிடைக்காத சிறியவர்களுக்கு ரிக்கட்ஸ், வயதான பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க, மீன் எண்ணெய், முட்டை, இறைச்சி, ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவினைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலுடன் கலந்து வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி அவசியம். இந்தச் சத்து குறைந்தால், ஸ்கர்வி என்னும் பல் பாதிப்பு ஏற்படும். சிட்ரஸ் வகைகளான ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி மற்றும் பப்பாளி, கீரை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்புகளைத் தடுக்கலாம். வைட்டமின் சி உள்ள உணவுப் பொருள்களுடன், இரும்பு நிறைந்த பேரீச்சை, திராட்சை போன்றவற்றையும் சேர்த்து உண்ணலாம்.
வைட்டமின் இ மிகச் சிறந்த ‘ஆன்டி ஆக்சிடன்டாக’ செயல்பட்டு புற்றுநோயைத் தடுக்கிறது. இது குறையும்போது வயதான தோற்றம், குறைப் பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க பாதாம், முளைகட்டிய கோதுமை, பருத்தி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவு செரித்தலின்போது குடல் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் கே சத்தின் அளவு குறைந்தால், ரத்தம் உறைதல் பாதிப்புகள் ஏற்படும். கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், சோயா எண்ணெய் இவற்றை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம், இந்த பாதிப்புகளைத் தடுக்கலாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : அதிமுக போராட்டம் முதல் இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி போட்டி வரை!
கிச்சன் கீர்த்தனா : பேபி கார்ன் சில்லி 65
தக்காளி சாஸ் ரசம் : அப்டேட் குமாரு
கள் விற்பனைக்கு அனுமதி: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!