‘It’s Glow Time’ நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16 தொடர் போன்களை அறிமுகம் செய்தது. அதனுடன், பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஸ்மார்ட்வாட்சையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 2 வகையான உலோகங்களில், உங்கள் கைகளுக்கு ஏற்றவாறு 2 வகையான அளவுகளில் அறிமுகமாகியுள்ளது.
அலுமினியம் மற்றும் டைட்டானியம் என 2 வகையான உலோகங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் சில்வர், ரோஸ் கோல்டு, ஜெட் பிளாக் என 3 வண்ணங்களில் கிடைக்கப்பெறுகிறது. அதேபோல, டைட்டானியத்தால் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் நேச்சுரல், கோல்டு, சிலேட் என 3 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்வாட்ச் 42மிமீ, 46 மிமீ என 2 அளவுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச்சிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஸ்மார்ட்வாட்ச் செப்டம்பர் 20 அன்று விற்பனைக்கு வரவுள்ளது.
இதில், அலுமினியத்தால் தயாரான வாட்ச்கள் ரூ.46,900 என்ற விலையிலும், டைட்டானியத்தால் தயாரான வாட்ச்கள் ரூ.79,900 என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஸ்மார்ட்வாட்ச்சில், எலக்ட்ரிகல் ஹார்ட் சென்சார், ஆப்டிகல் ஹார்ட் சென்சார், வெப்பநிலை சென்சார், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அளக்கும் சென்சார் என பல சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த சென்சார்கள் மூலம், செயலியில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, இதயத்துடிப்பு, ஈசிஜி உள்ளிட்டவற்றை பரிசோதித்துக்கொள்ள முடியும்.
மேலும், உங்கள் இதயம் மெதுவாகவோ, வேகமாகவோ அல்லது சீரற்றோ துடித்தால், உடனடியாக எச்சரிக்கை வழங்கும் வகையில் இந்த வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாட்ச் மூலம் நீங்கள் எந்த அளவு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளீர்கள் என்பதையும் கவனித்துக்கொள்ளலாம்.
இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால், சாதாரணமாக பயன்படுத்தும்போது 18 மணி நேரமும், லோ பவர் மோடில் 36 மணி நேரமும் நீடிக்கும் பேட்டரியை கொண்டுள்ளது. மேலும், 30 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.
watchOS 11 அமைப்பு கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில், ரன்னிங், ஹைக்கிங், சைக்ளிங், ஸ்விம்மிங் என 24-க்கும் அதிகமான ஒர்க்-அவுட் வசதிகள் உள்ளன.
மேலும், உங்கள் வாகனம் விபத்தில் சிக்கினாலோ, எதிர்ப்பாராத விதமாக நீங்கள் எங்காவது தவறி விழுந்தாலோ, அதை உடனடியாக உணர்ந்து, எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பும் திறனையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
சுற்றுச்சுழலை பாதிக்காமல் தயாராகியுள்ள ‘AirPods 4’: சிறப்பு என்ன?
மிரட்டலான ஐபோன் 16 ப்ரோ, 16 ப்ரோ மேக்ஸ்: இவ்வளவு விலையா?
புதிய வசதிகளுடன் அறிமுகமான ஐபோன் 16, 16 பிளஸ்: விலை என்ன?