ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ரோஜா திடீரென மேடையேறி உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக இருப்பவர் ரோஜா.
முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் மகாதி ஆடிட்டோரியத்தில் ஜகன்னா ஸ்வர்ணோத்ஸவ சம்ஸ்க்ருதிகா சம்பராலு என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கலாச்சாரத் துறையின் மாநில படைப்பாற்றல் மற்றும் கலாச்சார ஆணையத்தால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நேற்று(நவம்பர் 21)ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மாணவிகள் திரைப்பட பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது, ரோஜாவும் திடீரென மேடையேறி நடனமாடினார்.
அமைச்சர் ரோஜா மேடையேறி மாணவிகளுடன் இணைந்து நடனமாடியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மாணவிகளுடன் நடனடிமாடிய ரோஜா இறுதியில் அவர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.
இதேபோன்று நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின பாடலுக்கு ரோஜா நடனமாடி அசத்தினார்.
இந்த வீடியோவை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ரோஜா, “ஒரு கலைஞராக, நமது பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய கலைகளை எதிர்கால சந்ததியினருக்கு வழங்க கலைஞர்களை ஆதரிப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. சினிமாவில் இருக்கும்போதே சிறப்பாக நடனமாடக் கூடியவர் என்பதால் தற்போதும் அவரது நடனத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கலை.ரா
தேவாவுக்காக வேண்டுகோள் வைத்த ரஜினி