அமேசானில் ஷூ ஆர்டர் செய்தவருக்கு ஒரே ஒரு ஷூ மட்டும் டெலிவரி செய்யப்பட்ட நிகழ்வு வைரலாகி வருகிறது.
வளர்ச்சியடைந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகத்தில் அனைத்தும் ஆன்லைன் மயமாக மாறிவிட்டது. ஆடை முதல் வீட்டில் இருக்கும் டிவி, ஃபிரிட்ஜ் வரை அனைத்து பொருட்களையும் அதிகப்படியான மக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்கிறார்கள்.
அவ்வாறு ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது நாம் ஆர்டர் செய்யும் பொருள் வராமல் வேறு பொருள் மாறி வருவதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த திரைப்பட உதவி இயக்குநர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு அமேசானில் பேட்மிண்டன் விளையாட்டிற்கான ஷூவை தள்ளுபடி விலையில் ஆர்டர் செய்துள்ளார்.
ஜிஎஸ்டி மற்றும் மற்ற வரிகளுடன் சேர்த்து ரூ. 1488 மதிப்பில் ஆர்டர் செய்யப்பட்ட அந்த ஷூ இன்று (ஜனவரி 4) அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
ஆர்டர் செய்த ஷூ வந்துவிட்டது என்று பார்சலை பிரித்துப் பார்த்த அவருக்கு அமேசான் நிறுவனம் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம் ஆர்டர் செய்யப்பட்ட ஷூ ஜோடியாக வராமல் ஒரு ஷூ மட்டும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அமேசான் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு அவர் பேசிய போது, இதற்கான மாற்று ஷூவை வழங்க முடியாது எனவும், பணத்தை மட்டும் திரும்ப வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கிறோம் எனவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் தவறுதலாக மாறி வந்தால் அதற்கான மாற்றுப் பொருளை வழங்குவதை ஆன்லைன் நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன.
ஆனால் அமேசான் நிறுவனம் ஷூவை மாற்றிக் கொடுக்க முடியாது என்று பதில் அளித்திருப்பது தற்போது ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்பவர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.
மோனிஷா