தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் இன்று வானில் பறந்த அனைத்து விமானங்களும் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விமான கண்காணிப்பு இணையதளமான ஃப்ளைட்அவேர் இன்று (ஜனவரி 11) செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், “அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 760 விமானங்கள், மிகப்பெரிய கணினி செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் உள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) விமானப் பயணங்களுக்கான அறிவிப்பு முறையின் புதுப்பிப்பைப் பாதிக்கும் செயலழிப்பை சந்தித்துள்ளது. விமானம் மற்றும் பாதுகாப்புத் தகவலின் உண்மை நிலவரத்தை ஆய்வு செய்ய ஏஜென்சியை அனுமதிக்கும் வகையில், காலை 9 மணி வரை அல்லது மாலை 7:30 மணி வரை அமெரிக்காவில் உள்நாட்டுப் புறப்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று எஃப்ஏஏ தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்திய நேரப்படி மாலை 4 மணி நிலவரப்படி அமெரிக்கா முழுவதும் வானில் பறந்த 400க்கும் மேற்பட்ட விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன” என்று ஃப்ளைட்அவேர் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று அமெரிக்காவிற்குள் உள்ளே அல்லது வெளியே செல்ல தயாராக இருந்த 1,200 விமானங்கள் தாமதமாகி வருவதாக விமான கண்காணிப்பு இணையதளமான ஃப்ளைட்அவேர் சுட்டிகாட்டியுள்ளது.
இதுவரை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் குறித்த தகவல் வெளிவரவில்லை.
அதேவேளையில், இன்று அதிகாலை முதல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கலைத் தீர்ப்பதற்கு எஃப்ஏஏ தீவிரமாக செயல்படுவதாகவும், பயணிகள் தங்கள் விமான பயணத்தின் புதிய தகவலை தொடர்ந்து சரிபார்க்கவும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா