இன்சூரன்ஸ் காலாவதியான பைக்கில் நடிகர் அஜித்குமார் பயணம் செய்ததாக தகவல் பரவியதைத் தொடர்ந்து அஜித், விஜய் ரசிகர்கள் இடையே சமூகவலைத்தளங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜித் பைக் ரேசர் என்பது அனைவருக்கும் தெரியும்.
பிரபல இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் பெயரிடப்படாத தனது அடுத்த படத்தில் (AK61) நடித்து வருகிறார். அதன் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
அஜித்தின் லடாக் பயணம்!
இதற்கிடையே தற்போது ஓய்வில் இருக்கும் நடிகர் அஜித் தனது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ (BMW R 1200) பைக்கில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணம் செய்து வருகிறார்.
சமீபத்தில் இந்தியாவின் இமயமலை பகுதிகளில் பைக் பயணம் மேற்கொண்ட அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து சென்றுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
காலாவதியான பைக் இன்சூரன்ஸ்?
இந்நிலையில் தற்போது லடாக் பயணம் செய்து வரும் அஜித் பைக்கின் எண்ணும் புகைப்படங்களில் தெளிவாக தெரிந்தது.
இதனையடுத்து அந்த பைக் எண்ணை வைத்து ஆராய்ந்த இணையவாசிகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த பைக் 2019ல் அஜித் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பைக்கிற்கான இன்சூரன்ஸ் கடந்த 2020ம் ஆண்டே காலாவதியாகி விட்டதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் அஜித் பயணம் செய்து வருகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
தல – தளபதி ரசிகர்கள் மோதல்!
இந்த சர்ச்சை தற்போது அஜித் விஜய் ரசிகர்கள் இடையே சமூக வலை தளங்களில் மோதலை ஏற்படுத்தி உள்ளது.
இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் அஜித் பயணம் செய்வதாக கூறி #FraudCitizenAjith என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக விஜய் இதுவரை சந்தித்த சர்ச்சைகளையெல்லாம் குறிப்பிட்டு #AntiSocialistVIJAY என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
டிவிட்டரில் தல தளபதி ரசிகர்கள் மோதி கொள்வது ஒன்றும் புதிதல்ல. சகிக்க முடியாத அளவில் ஹேஸ்டேக்கை பதிவிட்டு இருவரின் ரசிகர்களும் சண்டையிட்டு கொள்வது சினிமா ஆர்வலர்களையே முகம் சுளிக்க செய்கிறது.
எம்.ஜி.ஆர். – சிவாஜி, ரஜினி – கமல் ஆகியோரைத் தொடர்ந்து அஜித் – விஜய் ஆகியோர் தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரங்களாக உள்ளனர்.
இருவரும் தங்கள் ரசிகர்களுக்கு இதுகுறித்து வேண்டுகோள் விடுத்தும் சமூகவலைத்தளங்களில் சண்டையிடும் போடும் சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா