புத்தாண்டு துவக்கத்தில் அமேசான் நிறுவனம் ஆஃபர்கள் வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை அமேசான் நிறுவனம், தனது 20,000 ஊழியர்களை வெளியேற்றி அதிர்ச்சி ஆஃபர் கொடுக்க உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார மந்தநிலை அதிகரித்து வருவதால், பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணிநீக்கம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது அமேசானில் ஒரே கட்டமாக கீழ்நிலை ஊழியர்கள் தொடங்கி மேலதிகாரிகள் வரை கிட்டதட்ட 20,000 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஃபேஸ்புக் மெட்டா , கூகுள் , ட்விட்டர் போன்ற டெக் நிறுவனங்கள் தொடர்ச்சியாக பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து வரும் நிலையில், தற்போது ஜெஃப் பெசோஸ் நிறுவனமான அமேசானும் அதே நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது.
அமேசான் பணிநீக்க அறிவிப்பை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது 2023 ஆம் ஆண்டு தொடக்க வாரத்தில் ஊழியர்களின் பணிநீக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் , அதற்கான பிங்க் லிஸ்ட்டும் கொடுக்கப்பட உள்ளது.
அமேசானில் தற்போது உலகம் முழுக்க 1.5 மில்லியன் மக்கள் பணியாற்றி வருகின்றனர். ஊழியர்களின் வேலைத்திறன் மட்டுமல்லாமல் பணி நேரத்தில் அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதனை அறிவதற்காக சமீபத்தில் ஒரு குழுவையும் நியமித்திருக்கிறார்கள்.
ஒரு வேளை அதன் அடிப்படையில் தான் இந்த வேலை நீக்க பட்டியல் தயாராகி இருக்கிறதா? என்ற அச்சமும் அமேசான் ஊழியர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது.
அதன்படி பார்க்கும் போது 20000 பேரை பணி நீக்கம் செய்தால் ,அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் கிட்டத்தட்ட 6 சதவீதம் பேர் வேலையிழக்க வாய்ப்புள்ளது.
மேலும் பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு 24 மணி நேரத்திற்கு உண்டான அறிவிப்பு மற்றும் பணிநீக்கத்திற்கான ஊதியம் எல்லாம் சரியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி நீக்க நடவடிக்கை குறிப்பிட்ட துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமேசான் தாங்களாகவே வெளியேப்போன ஊழியர்களுக்கு வி.ஆர்.எஸ் திட்டத்தினை அறிவித்திருந்தனர்.
ஆக இதன் மூலமாக இன்னும் சிலரை வெளியேற்றலாம் என்றும் கச்சிதமாக யோசித்து தான் இந்த முடிவை அறிவித்தார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் தற்போது பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு கூடுதலாக ஏதேனும் சலுகைகளை அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் வழங்குவாரா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.
பணிநீக்க நடவடிக்கையால் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் குறைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் , இவையெல்லாம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆக இந்த பணிநீக்க அறிவிப்பை ஜெஃப் பெசோஸ் அதிகாரப்பூர்வமாக எப்போது அறிவிப்பார் என்ற கேள்வி தான் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது.
பவித்ரா பாலசுப்ரமணியன்