கண்களைக் கவரும் வண்ணமும், மனதை மயக்கும் வாசனையும், அழகான வடிவங்களும் கொண்ட பூக்களைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், நடிகை சமந்தா, கடந்த சில வாரங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பூக்கள் ஒவ்வாமை இருப்பதாக போஸ்ட் செய்திருந்தார். இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுமளவு அவதிப்பட்டதையும் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கெனவே மயோசைட்டிஸ் என்கிற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படையாகக் கூறி அதிரவைத்த சமந்தா, தற்போது பூக்கள் அலர்ஜி பற்றியும் பேச வைத்திருக்கிறார்.
பூக்களால் அலர்ஜியா… யாருக்கு வரும்…எப்படித் தவிர்ப்பது? அலர்ஜி சிகிச்சை மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“அலர்ஜி என்பது நோய் எதிர்ப்பு சக்தியில் இருக்கும் குறைபாடு அல்ல. உண்மையில் நம் எதிர்ப்பு சக்தியின் அதிகபட்ச எதிர்வினையே அலர்ஜி. இந்த அலர்ஜியானது உடலால், சூழ்நிலையால், மூக்கின் வழியே சுவாசிக்கும் காற்றினால், உட்கொள்ளும் மருந்துகளால், போட்டுக்கொள்ளும் ஊசியால் எனப் பல காரணங்களால் வரலாம். இந்த அலர்ஜி பட்டியலில் பூக்களும் உண்டு.
அனைத்து உயிரினங்களும் இனவிருத்தி செய்வதுபோல், பூக்களும் தனது சந்ததியைப் பெருக்குவதற்கு மகரந்தம் மூலம் இனவிருத்தி செய்கிறது. கண்ணுக்குத் தெரியாத மிகவும் நுண்ணிய துகள்களான இந்த மகரந்தங்களினாலேயே பூக்கள் அலர்ஜி பொதுவாக உண்டாகிறது. இதற்கடுத்து அதிக வாசனை கொண்ட பட்டு ரோஜா, மல்லிகை, ஜாதிப்பூ, தாழம்பூ போன்ற மலர்களாலும் அலர்ஜி உண்டாகும்.
எல்லோருக்கும் எல்லா பூக்களினாலும் அலர்ஜி வருவதில்லை. மரபியல் காரணங்களே இதில் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது. நம் வம்சாவளியில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என யாரேனும் இத்தகைய அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அந்த சங்கிலியின் நீட்சியாக அதே வம்சத்தைச் சேர்ந்தவர் பூக்களினால் அலர்ஜிக்கு ஆளாகலாம்.
பூக்களின் அலர்ஜி சிலருக்கு 10 தும்மல்களோடு நின்றுவிடும். ஆனால், பலருக்கு இந்த தும்மல்களின் எண்ணிக்கை 100, 200 என அதிகரிக்கும். இதனால் அவர்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கும். எந்த வேலையையும் செய்ய முடியாது. கவனக்குறைவு ஏற்படும். தொடர்ச்சியான தும்மல்களால் உடல் சோர்வு ஏற்படும். தலைவலி உண்டாகும். பார்த்தீனியம், வேலி காத்தான், அறுகம்புல் போன்றவற்றின் மகரந்தங்களின் அலர்ஜியால் இந்தியர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.
வசந்தகாலங்களிலும், புயல், மழை உண்டாகும் காலங்களிலும் மகரந்தங்களின் பரவல் அதிகமாக இருக்கும். எனவே, அத்தகைய நேரங்களில் அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வெளியில் செல்ல நேரிட்டால் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் உடைகள், காலணிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். உடனடியாகக் குளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நம் உடைகளிலும், காலணிகளிலும் படிந்திருக்கும் மகரந்தங்கள் நம் வீட்டுக்குள்ளும் வந்துவிடும்.
இத்துடன் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். டேபிள், சேர், சோஃபா போன்ற ஃபர்னிச்சர்களில் வெளியிலிருந்து வந்த மகரந்தங்கள் படியலாம். எனவே, வாக்வம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.
அலர்ஜி பாதிப்பிலிருந்து மீண்டு வர ஆன்டி ஆன்டிஹிஸ்டமீன் (Antihistamine) வகை மருந்துகள் இருக்கின்றன. மூக்குக்கான சில ஸ்பிரே வகைகளும் இருக்கின்றன. மருத்துவரின் பரிந்துரையோடு சரியான அளவில் ஸ்டீராய்டு ஸ்பிரே எடுத்துக் கொள்வது பலன் தரும். குறுகிய காலத்துக்கு மட்டுமே ஸ்டீராய்டு எடுக்க வேண்டும் என்பதால் பாதிப்பு இருக்காது” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவம் வந்தா குணம் போய்டுதே : அப்டேட் குமாரு
போதை வழக்கில் ஜாபர் சாதிக்… அதிர்ச்சியில் அமீர்
‘மார்ச் 15க்கு பிறகு Paytm FASTags வேலை செய்யாது!’ : மாற்றுவழிகள் இதோ!
GOAT பர்ஸ்ட் ‘சிங்கிள்’ மற்றும் ‘ரிலீஸ்’ தேதி இதுதான்!