நடிகை அமலா பால் கிறிஸ்தவர் என்பதால் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ பார்வதி சன்னதி ஆண்டுதோறும் 12 நாட்கள் நடக்கும் நடதூர திருவிழாவின் போது மட்டுமே திறக்கப்படும்.
இந்தாண்டு இந்த ஆண்டு ஜனவரி 5 முதல் 16 வரை திருவிழா நடைபெற்றது. இதன் கடைசி நாளான 16ம் தேதி அம்மனை தரிசிப்பதற்காக கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அமலாபால் நேற்று முன் தினம் (ஜனவரி 16) திருவைராணி மகாதேவர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
ஆனால் கோயில் வளாகத்திற்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற காரணத்தை கூறிய நிர்வாகிகள், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அமலா பாலை கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபட மறுத்துள்ளனர்.
மேலும் அம்மனை சாலையில் இருந்து வழிபட அவர்கள் கூறியதன் பேரில், அங்கிருந்து வழிபட்டுள்ளார் நடிகை அமலாபால்.
மனிதர்கள் தான்; மதவாதிகள் அல்ல
இதுகுறித்து கோயிலின் பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது அனுபவத்தையும், அதிருப்தியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், “2023 இல் கூட மத பாகுபாடு நிலவியதில் நான் வருத்தமும் ஏமாற்றமும் அடைகிறேன். என்னால் தேவியின் அருகில் செல்ல முடியவில்லை, ஆனால் அவளது அருளை தொலைவில் இருந்தாவது உணர்ந்ததை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.
இந்த மத பாகுபாடு மாற வேண்டும். நாம் அனைவரும் மனிதர்களாக கருதப்பட வேண்டும். மதவாதிகளாக அல்ல,” என்று அமலா பால் குறிப்பிட்டுள்ளார்.

இந்து அமைப்பு தலைவர் ஆதரவு
இது வெளிச்சத்திற்கு வந்த நிலையில் நடிகை அமலா பாலுக்கு சங்பரிவார் அமைப்புகளில் ஒன்றான இந்து ஐக்கிய வேதியின் முக்கிய தலைவரான ஆர்.வி.பாபு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பக்கத்தில், ”இந்து மதத்தில் பிறந்த ஒருவர் மத நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்.
அதே வேளையில் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் பக்தியுடன் கோவிலுக்கு வரும்போது அவருக்கு அனுமதி மறுப்பது நியாயமல்ல. இது ஆராயப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பலரும் அமலாபாலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கோவில் நிர்வாகத்தினையும் கண்டித்துள்ளனர்.
இந்து மதம் மாறிவிட்டீர்களா?
அமலாபாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கோவில் அறக்கட்டளை செயலாளர் பிரசூன் குமார் கூறுகையில், “தற்போதுள்ள நெறிமுறைகளை மட்டுமே பின்பற்றுகிறோம். இது இந்து முறைப்படி நடக்கும் கோயில். மற்ற மதங்களைச் சேர்ந்த சில பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். ஆனால் யாருக்கும் தெரியாது.
ஆனால், வேறு மதங்களைச் சேர்ந்த பிரபலங்கள் வந்தால் அது சர்ச்சையாகி விடுகிறது.
திங்கட்கிழமை அமலா பால் தரிசனம் செய்ய வந்தார். கோவில் அலுவலகத்தில் வைத்து இந்து மதத்திற்கு மாறிவிட்டீர்களா? என்று அவரிடம் நாங்கள் கேட்டோம். அவர் இல்லை என்று பதிலளித்தார்.
எனவே, வேற்று மதத்தினர் கோவிலினுள் நுழைந்தால் அது சர்ச்சையாகிவிடும் என்பதால், அவரை கோவிலுக்குள் செல்ல மறுப்பு தெரிவிக்க நேர்ந்தது.
அதே நேரத்தில், அவரை சாலையில் இருந்து தரிசனம் செய்யச் சொன்னோம். அவரும் ஏற்று வழிபட்டார். பின் மீண்டும் அலுவலகத்திற்கு வந்த அமலாபாலுக்கு நாங்கள் பிரசாதம் வழங்கினோம்” என்று கூறினார்.

கோவிலின் தனிச் சிறப்பு
அத்வைத வேதாந்தத்தை முன்னிறுத்திய ஆதிசங்கரரின் பிறப்பிடமாகப் புகழ் பெற்ற காலடிக்கு அருகில் உள்ளது திருவைராணிகுளம் மகாதேவர் கோயில்.
இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், கோயிலில் உள்ள சிவன் மற்றும் பார்வதி தெய்வங்கள் எதிர் திசையில் இருப்பதுதான். கோயிலின் பிரதான தெய்வமான சிவபெருமான் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பார். பார்வதி தேவி மேற்கு நோக்கியபடி இருக்கிறார்.
பார்வதி தேவியின் சன்னதி வருடத்தில் பன்னிரெண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். திருமண வரம் வேண்டி இங்கு சிவபெருமானையும், பார்வதியையும் பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்!