இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இருவரும், சென்னை விமான நிலையத்தில், நகரும் வண்டியில் செல்லும் போது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரகுமான் இல்லாமல் எழுத முடியாது.
அந்த அளவுக்கு அவர்களுடைய இசை தமிழ் சினிமாவில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தமிழ் சினிமா இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றதில் இவர்கள் இருவருடைய பங்களிப்பும் அளப்பரியது.
கனடாவின் மார்கம் நகரிலுள்ள ஒரு தெருவுக்கு 2017-ஆம் ஆண்டு அல்லா ரக்கா ரகுமான் தெரு என்று இசைபுயலின் பெயர் சூட்டப்பட்டது.
இந்தநிலையில், தற்போது இரண்டாவது தெருவுக்கு ஏ.ஆர்.ரகுமான் தெரு என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கான விழாவில் கலந்து கொள்வதற்காக, ஏ.ஆர்.ரகுமான் கனடா சென்று அதன் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டார். தற்போது அவர் கனடா சென்று விட்டு சென்னை திரும்பியுள்ளார்.
அதனைப்போல, இசைஞானி இளையராஜா ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் என்ற நகரத்திற்கு சென்றிருந்தார்.
அவர்கள் இருவரும் இன்று (செப்டம்பர் 1) காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது விமான நிலையத்தில் உள்ள நகரும் வண்டியில் இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இருவரும் சென்றனர். அவர்கள் இருவரும் நகரும் வண்டியில் சென்ற போது, ஏ.ஆர்.ரகுமான் அதனை வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “நாங்கள் வெவ்வேறு கண்டங்களிலிருந்து திரும்பினாலும், எங்கள் பயண இலக்கு எப்பொழுதும் தமிழ்நாடு தான்” என்று போஸ்ட் செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
செல்வம்
இளையராஜாவுடன் ஒரு சந்திப்பு: அறுபது நிமிட அற்புதம்