காதலர் தினத்தை முன்னிட்டு கடல் நீருக்கடியில் நீண்ட நேரம் முத்தமிட்டு காதல்ஜோடி ஒன்று கின்னஸ் உலகசாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெத்நீல்(40) மற்றும் கனடாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை மைல்ஸ் க்ளூட்டியர்(33) இருவரும் காதலர்கள்.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில் நாடுகடந்த இந்த காதல் ஜோடி வித்தியாசமான கின்னஸ் சாதனை படைக்க ஆசைப்பட்டனர்.
அதன்படி மாலத்தீவுக்கு வந்த பெத்நீல் – க்ளூட்டியர் ஜோடி, அங்குள்ள இன்பினிட்டி நீருக்கடியில் 4நிமிடம் 6வினாடிகளுக்கு முத்தம் கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இது கின்னஸ் உலக சாதனை வரலாற்றில் நீருக்கடியில் நிகழ்த்தப்பட்ட நீண்ட நேர முத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மைக்கேல் ஃபுகாரினோ மற்றும் எலிசா லாஸைனா ஆகியோரின் மூன்று நிமிடங்கள் 24வினாடிகள் கொண்ட முத்த சாதனை 13ஆண்டுகளுக்குப் பிறகு முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து க்ளூட்டியர் கூறுகையில், “நீருக்கடியில் காதலை வெளிப்படுத்துவதன் மூலம், அதன் மாயாஜாலத்தையும் அதிசயத்தையும் மற்றவர்களை காண தூண்டியுள்ளோம்.
அதே நேரத்தில் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், வருங்கால சந்ததியினருக்கு கடத்துகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
5ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கடல் பாதுகாப்பு குறித்த கூட்டரங்கில் ப்ரீ டைவிங் கற்றுகொடுக்க வந்த க்ளூட்டியரும், தன்னார்வலராக வந்த பெத்நீலும் சந்தித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த கின்னஸ் சாதனைக்காக இருவரும் கடந்த நான்கு நாள்களாக நீருக்கடியில் பயிற்சி பெற்ற நிலையில், காதலர் தினத்தில் தங்களது முத்த சாதனையை புரிந்துள்ளனர்.
கின்னஸ் சாதனை சான்றிதழைக் கொடுத்த அதிகாரி கூறுகையில், “பெத்நீல் மற்றும் க்ளூட்டியர் நீருக்கடியில் நிகழ்த்திய அபாரமான சாதனை என்னை மூச்சுத்திணறச் செய்கிறது.
காதலுக்கு என்ன ஒரு நம்பமுடியாத சான்று – நமது அழகான கடல்களைக் கொண்டாடவும், பாதுகாக்கவும் உதவியதில் இது ஒரு காவிய சாதனை தான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
உருட்டுக்கட்டையுடன் கல்லூரிக்குள் நுழைந்த வட இந்தியர்கள்: அலறிய மாணவிகள்!
பிபிசி ஆவணப்படம் தடை: பிபிசி நிறுவனத்திற்கும் தடையா?