மதுரையில் மாநகராட்சி வாகனத்தில் ஏற்றிச் சென்ற தனது குட்டியை பின்தொடர்ந்து பரிதவித்து ஒடிச்சென்ற தாய்க்குதிரையின் பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்மை என்ற உணர்வுக்கு இந்த உலகத்தில் ஈடு, இணை எதுவுமே இல்லை. தன் பிள்ளைகளுக்காக எந்த சூழ்நிலையிலும், எதை எதிர்த்தும் போராடும் குணம் தாய்க்கு உண்டு.
அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்குமே பொருந்தும். அப்படி, பறவை மற்றும் விலங்கினங்கள் தனது தாய்ப்பாசத்தை காட்டும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
அந்த வகையில் மதுரையில் நடந்திருக்கும் நிகழ்வு ஒன்று காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள், குதிரைகள் சுதந்திரமாக வலம் வருவதால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனால் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் குட்டி குதிரை ஒன்றை பிடித்து வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது தாய்க்குதிரை தனது குட்டியை பிரிய மனமின்றி மாநகராட்சி வாகனத்தை மறைத்து நின்றது. அத்துடன் வாகனத்தில் ஏற மறுத்தது. தனது குட்டியை ஏற்றிச் சென்ற வாகனத்தின் பின்னால் ஓடி செல்லும் வீடியோ காண்போரை நெகிழ வைத்துள்ளது.
கலை.ரா