சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 200 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக சிகிச்சைக்காக வந்தவர்கள் காதலித்து கரம்பிடித்திருக்கின்றனர்.
200 ஆண்டுகள் பழமையான சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மன நல காப்பக்கத்தில் மனநல சிகிச்சைக்காக பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து குணமடைந்து சென்றுள்ளனர்.
அந்த வகையில், இரண்டு ஆண்டுகள் முன்பு சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும் வேலூரை சேர்ந்த 36 வயதான தீபாவும் குடும்பச்சூழல் காரணமாக ஏற்பட்ட Affective Disorder , Depression ஆகிய வெவ்வேறு காரணங்களால் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்நோயாளியாக சிகிச்சை எடுக்க தொடங்கினர்.

மருத்துவர்கள் அவர்களுக்கு அளித்த தொடர் சிகிச்சையின் பலனாக மன நோயிலிருந்து விடுபட்டு இருவரும் காப்பகத்தில் உள்ள Care centre ல் தங்கி தற்போது மனநல காப்பகத்திலேயே வேலை செய்து வருகின்றனர்.
எம்.பில் வரை படித்துள்ள மகேந்திரன் காப்பகத்தின் உள்ள நோயாளிகளுக்கான பயிற்சி மையத்தில் பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
ஆசிரியர் படிப்பு முடித்த தீபாவும் அதே காப்பகம் சார்பில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
மருத்துவமனை வளாகத்தில் பார்த்து பழகிய தீபா மீது மகேந்திரனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளலாம் என்று தீபாவிடம் கேட்டிருக்கிறார் மகேந்திரன்.
ஆனால் தீபா உடனடியாக ஒத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகு தந்தையை இழந்த தீபாவுக்கு, மகேந்திரனின் அன்பும் அக்கறையும் கொஞ்சம், கொஞ்சமாக பிடித்து போக திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.

திருமணத்திற்கு இருவீட்டு உறவினர்களும் சம்மதம் தெரிவிக்க, தங்களுக்கு பிடித்த இடமான மருத்துவமனை வளாகத்திலேயே திருமணமும் நடைபெற்று உள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் மனநல காப்பக இயக்குனர் பூர்ணசத்திரிகா முன்னிலையில் திருமணம் நடைபெற, அமைச்சர் சேகர்பாபு , எம்பி தயாநிதிமாறன் , எம்எல்ஏ வெற்றியழகன் ஆகியோர் நேரில் வந்து தம்பதிகளை வாழ்த்தி புத்தாடைகளுடன் சீர்வரிசை வழங்கினர்.
தொடர்ந்து மருத்துவமனை பணியாளர்கள் வாழ்த்து பாடல் பாட, மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகளும், நண்பர்களும் தம்பதிகளை உற்சாகமாக வாழ்த்தி மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

மனநோயில் இருந்து மீண்டு புதியதொரு வாழ்க்கையை தொடங்கவுள்ள முதுகலை பட்டதாரிகளான மகேந்திரன் தீபா தம்பதியருக்கு மனநல காப்பகத்திலேயே வார்டு மேற்பார்வையாளர் பணி வாய்ப்பு வழங்கப்பட்டு, திருமண பரிசாக பணி ஆணையை மேடையிலேயே வழங்கினார் அமைச்சர் சுப்ரமணியன்.
சிகிச்சையில் தொடங்கி காதல் திருமணத்தை எட்டியிருக்கிறது மகேந்திரன், தீபா ஜோடியின் வாழ்க்கை பயணம்.
அரசு மனநல காப்பகத்தின் வரலாற்றில் இங்கு நடைபெறும் முதல் திருமணமே சாதி மறுப்பு காதல் திருமணம் என்பது கூடுதல் சிறப்பாகும்.
கலை.ரா
19% ஈரப்பத நெல் கொள்முதல் செய்ய ஒப்புதல்?
டிஜிட்டல் திண்ணை: ராசா மீது கோபம்? ஸ்டாலின் கொடுத்த பதில்!