Sripathi Civil Judge from Tribes

குழந்தை பிறந்த 2 நாட்களில் தேர்வு… சினிமாவை மிஞ்சிய நிஜம்… நீதிபதியான முதல் பழங்குடி பெண்!

டிரெண்டிங்

பழங்குடியினர் பிரிவில் இருந்து இளம்பெண் ஒருவர், தமிழ்நாட்டின் முதல் சிவில் நீதிபதியாகி சாதனை புரிந்துள்ளார்.

சமயத்தில் சினிமாவை விடவும் நிஜத்தில் பல சுவாரஸ்யமான, பெருமையான விஷயங்கள் நடைபெறுவது உண்டு. அதுபோல ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபதி. 23 வயதான இவர் பழங்குடியினர் பிரிவில் இருந்து முதல் பெண் நீதிபதியாகி சாதனை புரிந்துள்ளார்.

இவரின் இந்த சாதனை மற்றும் அதற்காக அவர் மேற்கொண்ட கடும் முயற்சிகள் குறித்து, பழங்குடியின மக்களுக்கு கல்விப்பணி ஆற்றிவரும் ஆசிரியை மகாலட்சுமி நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர்,“பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் Civil judge ஸ்ரீபதி.ஜவ்வாதுமலையில் பிறந்து, ஏலகிரி மலையில் கல்வி கற்று, B.A.,B.L., சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர்.

இன்று மலையும், மாவட்டமும் தெரிந்தவர்கள் அனைவரும் ஸ்ரீபதியைப் பாராட்டிப் போற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா(23), அவருடைய இனமா, அவர் வெற்றி அடைந்திருக்கும் துறையா? மூன்றுமே எனலாம் நீங்கள்.

Sripathi Civil Judge from Tribes

ஆனால் நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன் இந்தத் தகவலைக் கேட்டபோது. ஸ்ரீபதிக்குத் தேர்வு வரும் தேதியிலேயேதான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது.

தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது. தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார்.

“இரண்டாவது நாள் என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். டாக்டரின் ஆலோசனைப்படி வேறெப்படி பாதுகாப்பாக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம் மட்டும் கூறியிருந்தேன்.

“(பரமு, ஸ்ரீபதி இணையரின் நண்பர் & ஒரே ஊர்). மற்றபடி அவர் சென்றாரா இல்லையா என்று கூட கேட்கவில்லை. யார் வேண்டுமானாலும் ஆலோசனை கூறலாம். ஆனால் எடுத்து செயல்படுத்துவதில்தானே எல்லாமே இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து, வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வுக்குச் சென்னை செல்கிறார். தேர்வு எழுதினார். இதோ வெற்றிவாகையும் சூடியிருக்கிறார்.

உண்மையாகவே நினைத்துப்பார்த்தால் “ஏய் …எப்புட்றா?” என்று சொல்வதற்குமுன் தொண்டைக் குழிக்குள் திக் திக் அடிக்கிறது. இரத்தம் சொட்ட சொட்ட எப்படித்தான் ஸ்ரீபதி இதை எதிர்கொண்டாரோ என்று.

அதைவிட பெருமைப்படவும் பாராட்டப்படவும் வேண்டிய நபர் வெங்கட்ராமன், ஸ்ரீபதியின் இணையர். புள்ளதான் முக்கியமென்று சொல்லி, தடைகல்லாக நிற்கும் ஆண்களுக்கு மத்தியில் அவர் ஸ்ரீபதியின் இறக்கைகளில் பாராசூட் பொருத்திவிட்டவர் போன்று தெரிகிறார். Hats off you Venkat!

அடுத்து.. ஸ்ரீபதியின் தாய். கட்டிக்கிட்ட ஊரில் இருந்தால் பிழைக்க முடியாது என்றெண்ணி, தன் சொந்த ஊருக்கே சென்று, அங்குள்ள பள்ளியில் தன் மகளைச் சேர்த்துப் படிக்க வைத்த அவரின் வைராக்கிய குணம்தான் ஸ்ரீபதிக்கு அப்படியே வந்துள்ளது.

இணையேற்பு முடிந்து ஸ்ரீபதி அந்த ஊரில் நடக்கும் ஒரு கிராமசபையில் பங்கேற்று,கிராம வளர்ச்சித் தொடர்பாக பல கேள்விகளை அடுக்கியுள்ளார்.எல்லோரையும் போல அரசியல் பெருமகனார்கள் “இதுக எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்கப் போவுதுங்கனு நாங்களும் பார்க்கிறோம்” என்று எகத்தாளமாக முதுகுக்குப் பின்புறம் பேசியுள்ளனர்.

இதோ வெற்றியும் கண்டுள்ளார். இனி யாருக்கு வயிற்றில் புளிக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை. யார் சொன்னால் எல்லோருக்கும் கேட்குமோ அந்த இடத்திற்கு எங்கள் வலியைத் தெரிந்த, உணர்ந்த, புரிந்த ஒருவர் சென்றிருப்பது அவ்வளவு நிம்மதியாகவும் பெருமையாகவும் பக்கபலமாகவும் உள்ளது.

Sripathi Civil Judge from Tribes

நன்றிநவிலல், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று எழுதிவைத்துச் சென்ற எங்கள் முதல்வர் முக ஸ்டாலினுக்கு!” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அவரின் இந்த பதிவின் கீழ் அரசியல் பிரபலங்கள், தொழில்முனைவோர்கள், பொதுமக்கள் என பலரும் ஸ்ரீபதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!

பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்.

அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!  சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!

“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, – நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, – முன் னேறவேண் டும்வைய மேலே!” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டெல்லி : விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு… தலைவர்கள் கண்டனம்!

Video: ‘நண்பன்’ வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு நேரில் சென்ற அஜித்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *