கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜி.எஸ்.டி வருவாய் 33% அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) மாதந்தோறும் எவ்வளவு ரூபாய் வசூலாகியுள்ளது என்பது தொடர்பான விவரம் மத்திய நிதித்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்படும்.
அதன்படி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஆகஸ்ட் மாதத்திற்கான (கடந்த மாதம் ) நாட்டின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,43,612 கோடியென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் பங்கு ரூ. 24,710 கோடி, மாநில அரசின் பங்கு ரூ. 30,951 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி பங்கு ரூ. 77,782 கோடி ஆகும்.
இதில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி பங்கில் இருந்து ரூ. 29,524 கோடி மத்திய அரசுக்கும், ரூ. 25,119 கோடி மாநில அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி பங்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட பிறகு ஆகஸ்ட் மாதத்திற்கான மத்திய அரசின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 54,234 கோடி, மாநில அரசின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ, 56,070 கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2021) இதே ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 2022 ஆகஸ்ட் மாதத்தில் 28 சதவீதம் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது.
கடந்த 6 மாதங்களாக நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி வருவாய் 1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ள நிலையில் கடந்த ஆண்டில் (2021) முதல் 6 மாத ஜி.எஸ்.டி வருவாய் கணக்கிடும் போது இந்த ஆண்டில் 33% வருவாய் அதிகரித்துள்ளது எனவும் மத்திய நிதியமைச்சகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ, 7,060 கோடி வசூலான நிலையில் 2022 ஆகஸ்ட் மாதத்தில் 19 சதவீத ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து ரூ. 8,386 கோடி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
இனி நடந்துசெல்பவர்களுக்கும் ஜி.எஸ்.டி.! மத்திய அரசை விமர்சித்த தமிழக அமைச்சர்!