இந்தியர்கள் இருவர் 3 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் செய்து புதிய உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவில் பிசியோதெரபி துறையில் புகழ்பெற்ற ஆளுமையாக மருத்துவர் அலி இரானி உள்ளார். 1987-1997 ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட்டாக அலி இரானி இருந்துள்ளார். மேலும் இந்திய சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களின் ஆஸ்தான பிசியோதெரபிஸ்ட்டாகவும் உள்ளார்.
64 வயதான அலி இரானி மற்றும் அவரது நண்பர் சுஜோய் குமார் மித்ரா இருவரும் வித்தியாசமான முறையில் உலகை சுற்றிப்பார்க்க முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி இருவரும் தங்கள் பயணத்தை அண்டார்டிகாவில் இருந்து தொடங்கினர். டிசம்பர் 7 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு வந்தடைந்தனர்.

வெறும் 3 நாட்களில் அலி இரானி மற்றும் மித்ரா இருவரும் ஏழு கண்டங்களுக்கு அதாவது அண்டார்டிகா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 7 கண்டங்களுக்கும் சென்றுள்ளனர்.
மொத்தம் 3 நாட்கள், 1 மணி நேரம், 5 நிமிடங்கள் மற்றும் 4 வினாடிகளில் இந்த மாபெரும் பயணத்தை முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் அலி இரானி மற்றும் மித்ராவின் இந்த அதிவேக பயணம் தற்போது புதிய உலக கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது.
கின்னஸ் வழங்கிய சாதனை சான்றிதழை மருத்துவர் அலி இரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”இன்று நாங்கள் ஒரு சாதனையை முறியடிப்பதில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் நாளை வேறொருவர் எங்கள் சாதனையை முறியடிப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது நானாவதி மேக்ஸ் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவத் துறையின் தலைவராக உள்ளார் அலி இரானி.
முன்னதாக 1987-1997 ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக இரானி பணியாற்றிய காலத்தில், சூதாட்ட சர்ச்சையில் சிக்கி வாழ்நாள் தடை பெற்ற அசாருதீனுக்கும் இவருக்கும் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
அவைத் தலைவரின் பணிகள் என்ன? – நீதிபதிகள் கேள்வி!
3 பைக் – 14 பேர் சாகசம்: காவல்துறை அதிரடி!