பொம்மைகளை விற்று மாதம் 1.1 கோடி வருமானம் ஈட்டி வந்த 11 வயது சிறுமி ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பி.ஆர் குரு ராக்ஸி ஜாசென்கோவின் மகள் பிக்ஸி. 11 வயதாகும் இவர் ’பிக்ஸிஸ் போவ்ஸ்’ என்ற பிராண்ட் மூலம் ஒரு தொழில் முனைவோராக இருக்கிறார்.
கொரோனா காலத்தின் போது பிக்ஸிஸ் போவ்ஸ் என்ற பிராண்ட் மூலம் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் வணிகத்தைத் தொடங்கிய இவர் தற்போது இந்திய மதிப்பில் மாதம் 1.1 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி வருகிறார்.
வணிகத்தில் நல்ல லாபம் கிடைத்தாலும் பிக்ஸி தற்போது தன்னுடைய வேலையில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது தாய் ராக்ஸி கூறுகையில், “பிக்ஸி உயர்நிலை கல்வியில் அடி எடுத்து வைக்கவுள்ளதால் அவர் தன்னுடைய ஆன்லைன் பொம்மை கடையில் இருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்.
எங்கள் வணிகத்தில் கடந்த சில மாதங்களாக நாங்கள் முன்னோக்கிச் சென்று வருகிறோம். 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த வணிகம் ஒரு அற்புதமான தொழிலாக அமைந்தாலும், பிக்ஸியின் உயர்நிலைக் கல்விக்காக நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் இரண்டையும் ஒன்றாகப் பார்த்துக் கொள்ள நினைத்தோம். ஆனால் நேரமின்மை மற்றும் அழுத்தத்தின் காரணமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இவ்வளவு இளம் வயதில் பிக்ஸி ஒரு தொழில் முனைவோர் மனப்பான்மையோடு இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று பேசியுள்ளார்.
பிக்ஸி தன்னுடைய 11வது பிறந்தநாளை மிக ஆடம்பரமாக சுமார் 23 லட்சம் செலவு செய்து கொண்டாடிய போது அவர் மிகவும் பிரபலமானார். தற்போது மாதம் 1 கோடி வருமானம் ஈட்டும் பிக்ஸி ஓய்வை அறிவித்த போதும் பிரபலமாகியுள்ளார்.
மோனிஷா