உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு கைவினை கலைஞர் ஒருவர் 400 கிலோ எடை உள்ள பூட்டு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் எப்படி திண்டுக்கல் ’பூட்டு உற்பத்திக்கு’ பெயர்போன நகரமோ அதைப்போல் வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் நகர் கையால் செய்யப்படும் பூட்டுகளுக்கு பெயர் பெற்றது.
இந்த ஊரைச் சேர்ந்தவர் சத்ய பிரகாஷ் சர்மா. இவர் ராமரின் தீவிர பக்தர். இவர் உலகிலேயே கையால் செய்யப்பட்ட பிரமாண்ட்ட பூட்டை அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
பின்னர், 10 அடி உயரம், 4.5 அடி அகலம், 9.5 அங்குல தடிமன் கொண்ட ராட்சத பூட்டு ஒன்றை தானே உருவாக்கியுள்ளார். அதற்கு நான்கு அடியில் ராட்சச சாவியையும் தயாரித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற அலிகார் கண்காட்சியில் இந்த பூட்டை அவர் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும், இந்தப் பூட்டில் ஒரு சில மாற்றங்களை செய்து அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய சத்ய பிரகாஷ் சர்மா, “இது ஒரு கடினமான முயற்சி. இதில் என் மனைவி ருக்மணி என்னுடன் துணைநின்றார். எங்கள் ஊர் கைவினை பூட்டுக்கு பெயர் போனது. ஆனால், இதுவரை யாரும் இப்படிச் செய்யாததால், கோயிலுக்காக இந்த ராட்சதப் பூட்டைத் தயாரிக்க நினைத்தேன் ” என்றார்.
மேலும் அவர் மனைவி ருக்மணி இது குறித்து பேசுகையில், “முன்பு நாங்கள் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பூட்டை உருவாக்கியிருந்தோம். ஆனால் சிலர் பெரிய பூட்டை உருவாக்க பரிந்துரைத்ததால் நாங்கள் இந்த பிரமாண்ட பூட்டை செய்தோம்” என்ற அவர் ”இப்போது பூட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பூட்டை உருவாக்க சுமார் 2 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது” என்றார்.
முன்னதாக, ராமர் கோயில் அறக்கட்டளை அடுத்த ஆண்டு ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளது எனவும் அதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் எனவும் ராம் மந்திர் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 12-வரை ED காவல்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!