போர்ட் பிளேருக்கு அந்த பெயர் வந்தது எப்படி தெரியுமா? – பின்னணியில் சுவாரஸ்யம்!

Published On:

| By Kumaresan M

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்படும்  என்று  உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அனைத்து அடிமைச் சின்னங்களில் இருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானத்தால் ஈர்க்கப்பட்டு, இன்று உள்துறை அமைச்சகம் போர்ட் பிளேருக்கு ‘ஸ்ரீ விஜயபுரம்’ என்று பெயரிட முடிவு செய்துள்ளது.

‘ஸ்ரீ விஜயபுரம்’ என்ற பெயர் நமது சுதந்திரப் போராட்டத்தையும், அதில் அந்தமான் நிக்கோபார் பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சரி அந்தமான் தலைநகருக்கு போர்ட் பிளேர் என்ற பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம்.  கடந்த 1771 ஆம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த லெப்டினன்ட் ஆர்ச்சிபால்ட் பிளேர் என்பவர்  பம்பாய் மரைன் நிறுவனத்தில் பணியாற்ற இந்தியா வந்தார்.

1788 மற்றும் 1789 ஆம் ஆண்டுகளில் அந்தமான் தீவுகளை ஆராயும் பொறுப்பு அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அந்தமான் தீவின் தெற்கு பகுதியை ஆராய்ந்த போது, அங்கு மிகச் சிறந்த இயற்கை துறைமுகத்தை உருவாக்க முடியுமென்று ஆர்ச்சிபால்ட் பிளேர் நம்பினார்.

அப்படித்தான், போர்ட் பிளேர் நகரமும் துறைமுகமும் உருவாகின. முதலில் இந்த துறைமுகம் பிரிட்டிஷ் இந்திய கடற்படையின் தளபதியான கமோடர் கார்ன்வில்லிஸ் பெயரில், போர்ட் கார்ன்வில்லிஸ் என்றே அழைக்கப்பட்டது. பின்னர்தான் போர்ட் பிளேர் என்று மாற்றப்பட்டது.

முதன் முதலில் அந்தமானில் சாத்தம் தீவில் காடுகளை வெட்டி அழித்து வீடுகள் , காட்டேஜுகளை ஆர்ச்சிபால்ட் பிளேர்தான்  உருவாக்கினார். தொடர்ந்து, 1795 ஆம் ஆண்டு லெப்டினன்ட் ஆர்ச்சிபால்ட் பிளேர் இங்கிலாந்துக்கு திரும்பி விட்டார். பின்னர், 1858 ஆம் ஆண்டு அந்தமானில் மிகப் பெரிய சிறை கட்டப்பட்டு, இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்களை பிரிட்டிஷ் அரசு அங்கு அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியது என்பது பிற்கால  வரலாறு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு சோனியா, நட்டா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

நிறைய ரிலேஷன்ஷிப்ல இருந்தேன், இப்போ வெளியே வந்துட்டேன்- பகீர் கிளப்பும் ரெஜினா

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share