தேர்தலுக்கு முன் ஆண்டாள் கோயிலில் அர்ச்சனா பட்நாயக் சாமி தரிசனம்!

Published On:

| By Kavi

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே தேர்தல் ஆணையம் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொண்டது.

ADVERTISEMENT

இதில் 97.4 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இப்படிப்பட்ட சூழலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (டிசம்பர் 12) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கிறது. இந்த கோயிலில் மார்கழி நீராட்ட விழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. தற்போது பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இன்று 4ஆவது நாளாக நடைபெற்ற இந்த உற்சவத்தில் அர்ச்சனா பட்நாயக் கலந்துகொண்டார். அவருடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா, சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்நாட்டின் 30வது தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சனா பட்நாயக்  தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். ஒரு பெண் அதிகாரி தலைமையில் தமிழ்நாடு முதல்முறையாக தேர்தலைச் சந்திக்கவுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில் அர்ச்சனா பட்நாயக் ஆண்டாள் கோயிலுக்கு சென்றிருப்பது கவனத்தை பெற்றிருக்கிறது.

அர்ச்சனா பட்நாயக் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share