“அஞ்சலி அல்ல, வன்ம உளறல்”: ஜெயமோகனுக்கு அரவிந்தன் சகோதரர் காட்டமான பதில்!

Published On:

| By Minnambalam Desk

ஜெயமோகனுக்கு எழுத்தாளர் அரவிந்தனின் சகோதரர் காட்டமாக பதிலளித்துள்ளார்.

மூத்த எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் பதிப்பாசிரியரும், நமது மின்னம்பலத்தின் முன்னாள் இணை ஆசிரியருமான அரவிந்தன் (62) கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி காலமானார்.

ADVERTISEMENT

எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் அரவிந்தன். அவருடைய திடீர் மறைவு ஊடக உலகிலும் இலக்கிய உலகிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அவருக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக அஞ்சலியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதில் எழுத்தாளர் ஜெயமோகன், அரவிந்தன் குறித்து வெளியிட்ட இரங்கல் செய்திக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்தநிலையில் அரவிந்தனின் சகோதரர் ரவீந்திரன், மின்னம்பலத்தில் ஜெயமோகனுக்கு எழுதியுள்ள கடிதம் இதோ…

ADVERTISEMENT

“ஜெயமோகனுக்கு,
அரவிந்தனின் சகோதரன் ரவீந்திரன்…

உங்களை அரவிந்தனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என யாரும் கேட்கவில்லை..ஆனாலும் எழுதினீர்கள்..அதன் மூலம் வரக்கூடிய கவனம் வரட்டுமே என்ற விளம்பர புத்தி என்பதை அதைப் படித்த பின் தெரிந்து கொண்டேன்..

அரவிந்தன் வாழும்போது இது போல எதிர்த்திருந்தால், அதற்கு பதில் சொல்லும் பொறுப்பு எனக்கு வந்திருக்காது.

மேலும் எங்களது குடும்பத்தை இழுத்திருப்பது இந்த பதிலின் அவசியத்தை உருவாக்கியுள்ளது.

உங்களது அஞ்சலி ஒரு பொய்களால் புனையப்பட்ட வன்ம உளறல் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அரவிந்தனை தெரிந்த பின்தான் எனது தந்தையை உங்களுக்குத் தெரியும். மாற்றி எழுதியது முதல் பொய். அதுவுமில்லாமல் எந்த மரியாதைக் குறிப்பும் இல்லாமல் தார்கஷியா என ஏறக்குறைய ஒருமையில் துவங்கிய வெற்று கர்வம் உங்களது நோக்கத்தை எடுத்தவுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

எனது தந்தை தார்க்ஷியா என்கிற இங்கர்சால் விகடனில் ‘எழுதி’க்கொண்டிருக்கவில்லை..அதன் சிறுகதை போட்டி ஒன்றில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர்.

பின்னாளில் ‘வதம்’ என்கிற அந்த சிறுகதை விகடன் டிவியால் நாடகமாக்கப்பட்டபோது மறுபடியும் தொடர்பு கொண்டனர். அதற்கு முன்னும் பின்னும் இடையிலும் விகடனின் தொடர்பு இல்லை. அவரது எழுத்து பற்றியோ வாசிப்பு பற்றியோ கடுகளவும் நீங்கள் இதில் குறிப்பிடவில்லை.

உங்களுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது என்பதை இது தெரிவிக்கிறது.

இரண்டாவதாக, அவரது வாழ்வு அதன் விளைவுகள் எங்களை மட்டுமே சார்ந்தது. அதை போகிறபோக்கில் ஒரு வரியில் குறிப்பிடுவது அயோக்கியத்தனம். உரிமை மீறல்.

எனது தந்தையின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி குறிப்பிடும் உரிமை யாருக்கும் இல்லை. உங்களது வீட்டில் நடந்த விஷயங்களை இப்பவும் நான் சொல்லவில்லை.

‘எச்சிலைக்கு எதிர் இலை வீண்’ என்பதால் எதுவும் குறிப்பிடவில்லை.

அரவிந்தனின் விஜயபாரத நாட்கள் அவனது அக்கால சங்கத் தொடர்போடு சம்பந்தப்பட்டது. உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.

மகாதேவன் அரவிந்தனின் திறமையைக் கண்டறிந்து இந்தியா டுடே வில் வேலை பெற்றுக் கொடுத்தார். மகாதேவன் உங்களது நண்பர் என்று சொல்லிக் கொள்வது உங்களது விருப்பம். அரவிந்தனின் எழுத்து 18வயதில் ‘விழிமின்’ என்கிற கையெழுத்து பத்திரிக்கையோடு துவங்கியது..அதன் பின் விஜய் பாரதம் பணி..

அதன் கூடவே இளமைக்கால வறுமை காரணமாக செய்த பணிகளை குறிப்பிட்டு அரவிந்தனின் திறமைகளை மலினப்படுத்தும் முயற்சி தரமற்றது.

அரவிந்தனுக்கு சற்றே கால் ஊனம்தான்… அது உங்களுக்கு இருப்பது போன்ற மன ஊனம் அல்ல…

அரவிந்தனை நினைக்கும்போது அவனது ‘பலவீனித்த இளைஞர் பருவ நிலைதான்’ நினைவுக்கு வருவது உங்களது பொறாமையின் உச்சத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அரவிந்தனால் உருவாக்கப்பட்டவர்கள்,ஊக்கப்படுத்தப் பட்டவர்கள்,பாதை காட்டப்பட்டவர்கள் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்பது, எங்களது குடும்பத்தாருக்கே இப்போதுதான் தெரியும்.

அதுவும் அவர்களது ஊடகப் பதிவுகளை பார்த்து அறிந்ததுதான். அது போல் உங்களால் உருவான ஒருவரை காட்டினால் பெரிய விஷயம்தான்.

உமது எழுத்தாற்றல் நிகரில்லாதது. ஆனால் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கும் நீர்தான் முதன்மை ‘புளியமர’ உதாரணம்.

அப்படி யாருக்கும் பயனின்றி இருப்பது சொந்த விருப்பம்.. ஆனால் இறந்த ஒருவரைப் பற்றி இவ்வளவு வன்மமாய் பதிவிட்டு, அதற்கு அஞ்சலி என்ற பெயர் கொடுத்தது ஊனமான மனதின் பேய் நடனம்தான்.

ஒருவரின் மரணம் மற்றொருவருக்கு இவ்வளவு வன்மத்தை கிளப்பும் என்பதும் குறிப்பிடத்தக்கதுதான்.

இத்தனைக்கும் அரவிந்தனால் உங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டதாக எனக்கு நினைவில்லை. உங்களுக்கு வந்திருக்கக் கூடிய எதையும் அவன் தடுத்ததில்லை.

‘கல்கியை அப்போதுதான் அறிந்த நிலை’… என உங்களது மேட்டிமையை வெளிப் படுத்தியுள்ளீர்கள்.

ஆனால் சினிமாவில் கிடைக்கும் பணத்துக்காக அந்த இலக்கிய முகமூடியை கழற்றி விட்டு,எந்த பொன்னியின் செல்வனை கிண்டலடித்து எழுதி கவனப்படுத்திக் கொண்டீர்களோ, அதையே உங்களது பின் அறுபது வயதில், அதையே பல முறை படித்து, மனப்பாடம் செய்து, அதன் பின் பணம் கொடுப்பவரின் கட்டளைக்கு பணிந்து, கல்கியின் ‘பொன்னியின் செல்வனை’ கொத்துக்கறி செய்த நீங்களெல்லாம்..அரவிந்தன் தனது ‘ஆரம்ப இருபதுகளில்’.. என்ற அயோக்கியத்தனமாக வர்ணித்தது கேவலத்தின் உச்சம்.

இதை முடிக்கும் முன் ஒரு வார்த்தை… 

ஒருவர் தனக்கோ தன்னை சேர்ந்தவருக்கோ யாராவது வாழ்த்து, பாராட்டு, குறை சொன்னால் நிராகரிப்பதில்லை… ஆனால் அந்த பாராட்டு,அஞ்சலிக்குள், ‘மலினப்படுத்த வேண்டும்’ என்ற விஷவித்தை புதைத்துக் கொடுத்தால், அதை நிராகரிப்பதே சரியானது…

அரவிந்தன் மறைந்த இந்த தருணத்தில் நீங்கள் சொன்ன அஞ்சலிகள் ஏற்புடையதல்ல. அது வாழ்நாள் பொறாமையின், பொச்சரிப்பின் வெளிப்பாடு..

நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…” என்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஈயமும் இந்து ஞான மரபும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share