டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைதாகியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “அவரை தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போல நடத்தாதீர்கள்” என்று அமலாக்கத் துறையிடம் கூறினர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கேட்டும் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூவிடம், “இவ்வழக்கில் முதலில் ரூ.100 கோடி ஊழல் என்று கூறினீர்கள், இது 2 ஆண்டுகளில் ரூ.1100 கோடியானது எப்படி?” என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.
இதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, “இதில் 590 கோடி என்பது மொத்த விற்பனையாளரின் லாபம்” என்று கூறினார்.
அப்படியானால், லாபம் என்பதை ஊழலில் கிடைத்த பணம் என்று கூற முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அடுத்த கேள்வியாக இந்த வழக்கில் முதல் அரசு அதிகாரி எப்போது கைது செய்யப்பட்டார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, “மார்ச் 9, 2020″ என்று அமலாக்கத் துறை சார்பில் பதிலளிக்கப்பட்டது.
அப்போது, கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை ஏன் இவ்வளவு காலம் எடுத்தது என்று நீதிபதிகள் கேட்டனர்.
“யாரெல்லாம் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தால், அது ED தவறான நம்பிக்கையில் செய்திருக்கிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கும்” என்று பதிலளித்தார் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏ.எஸ்.ஜி ) ராஜூ.
இதையடுத்து நீதிபதிகள், “மணிஷ் சிசோடியா கைது செய்யப்படுவதற்கு முன்பும், சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகும் உள்ள இந்த வழக்கின் கோப்புகளை பார்க்க விரும்புகிறோம். மாஜிஸ்திரேட் முன் வழக்குக் கோப்புகளை சமர்ப்பித்தீர்களா? கெஜ்ரிவால் கைது செய்யப்படுவதற்கு முன்பான கோப்புகளையும் தாக்கல் செய்யுங்கள்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கெஜ்ரிவாலை கைது செய்யும் போது பிஎம்எல்ஏவின் 19வது பிரிவு கடைபிடிக்கப்பட்டதா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
தொடர்ந்து வாதங்களை முன்வைத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “கோவா தேர்தலின் போது அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டல் செலவு செய்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அது 7 ஸ்டார் ஹோட்டல். அந்த பில் ஆதாரங்கள் அமலாக்கத் துறையிடம் உள்ளது.
கெஜ்ரிவால் 100 கோடி ரூபாய் கேட்டு டிமாண்ட் செய்தார் என்பதற்கான ஆதாரத்தை எங்களால் காட்ட முடியும். அதுபோன்று இவ்வழக்கின் விசாரணையின் முன்னேற்றத்தில் தான் கெஜ்ரிவாலின் பங்கு குறித்து தெளிவாக தெரியவந்தது” என்று வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள் “அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பாக எப்போது முதல் கேள்வி கேட்கப்பட்டது” என்று கேள்வி எழுப்பினர்.
“கெஜ்ரிவால் குறித்து புச்சி பாபுவின் (பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் முன்னாள் ஆடிட்டர்) வாக்குமூலம் மூலம் தெரியவந்தது. புச்சி பாபுவின் வாக்குமூலம் பிப்ரவரி 23, 2023 அன்று பெறப்பட்டது” என்றார் ஏ.எஸ்.ஜி ராஜு.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவை கடுமையாக எதிர்த்தார்.
“ஒன்றை ஆண்டுகளாக அமலாக்கத் துறை எதுவும் செய்யவில்லை. தேர்தல் சமயத்தில் அவரை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது சரியானதல்ல. அரசியல் காரணங்களுக்காக அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.
தேர்தலை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் வழங்கினால் அது மோசமான முன்னுதாரணமாக அமையும். மற்றவர்களும் இதுபோன்ற விலக்குகளை கேட்க நேரிடும்” என வாதிட்டார்
இதை கேட்ட நீதிபதிகள், “அவர் அரசியல்வாதியா… அல்லது அரசியவாதி இல்லையா என்பதை நாங்கள் பார்க்கவில்லை.
ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு சிறப்பு சூழ்நிலை அல்லது வழக்கு சம்பந்தப்பட்டிருக்கும்.
தேர்தல் வருவதைக் கருத்தில் கொண்டு அந்த நபருக்கு அந்தச் சிறப்புச் சூழ்நிலை வருமா என்பதைதான் பார்க்க வேண்டும்.
தேர்தல் வரப்போகிறது, அவர் டெல்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இருக்கிறார், இது ஒரு அசாதாரண வழக்கு. அவருக்கு வேறு எந்த வழக்கிலும் தொடர்பு இல்லை” என்று நீதிபதிகள் கூறினர்.
இதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஒருவர் விவசாயியாக இருந்தால் அவர் வயலுக்குதான் செல்ல வேண்டும். ஒரு மளிகை கடைக்காரர் அவரது கடைக்குதான் செல்வார். கெஜ்ரிவால் முதல்வர்… அவர் பிரச்சாரம் செய்ய விரும்புகிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த ஒப்பீடு தவறானது என குறிப்பிட்ட நீதிபதிகள், “அமலாக்கத் துறை கால அவகாசம் எடுத்துக்கொண்டால் ஜாமீன் மனு மீது நாங்கள் முடிவு செய்ய முடியாது. இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்க முடியாமல் போகலாம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும்.
4 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யும் விஷயமல்ல” என்று குறிப்பிட்டனர்.
தற்போது இடைக்கால நிவாரணம் வழங்கப்படாவிட்டால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்குள் தேர்தல் முடிந்துவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்
தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரல், “டெல்லி முதல்வர் எந்த இலாகாவும் இல்லாத முதல்வர். இவர் எந்த கோப்பிலும் கையெழுத்திட மாட்டார். பிரதமர் கூட கோப்புகளில் கையெழுத்து இடுவார்” என்று தெரிவிக்க,
இதற்கு பதிலளித்து வாதிட்ட கெஜ்ரிவால் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “ எஸ்.ஜி.மேத்தா முன்வைக்கும் வாதங்கள் தொடர்பே இல்லாதது. இலாகா இல்லாமல் முதல்வர் என்ன? பிரதமர்களே இருந்திருக்கிறார்கள். எஸ்.ஜி. மேத்தா வைக்கும் வாதங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டதுதானா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “கெஜ்ரிவால் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் அல்ல. முதலில் பஞ்சாபிலும், 25ம் தேதி டெல்லியிலும் தேர்தல் நடக்கிறது. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதங்களை முன்வைத்தார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியிடம், “தேர்தல் காரணமாக இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பிறகு கெஜ்ரிவால் அலுவல் பணிகளை செய்ய அலுவலகத்துக்கு சென்றால் அது விளைவுகளை ஏற்படுத்தும். அவருக்கு ஜாமீன் வழங்கும் போது உத்தியோகபூர்வ பணிகளைச் செய்வதை நாங்கள் விரும்பவில்லை.
இடைக்கால ஜாமீன் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்போம்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து, “கெஜ்ரிவாலின் வழக்கை எப்போது விசாரிக்க முடியும் என்று பார்க்கலாம். நாங்கள் ஒரு முடிவுக்கு வந்த பின்பு உங்களிடம் தெரிவிக்கிறோம். தற்காலிகமாக இந்த வழக்கை மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் அமலாக்கத் துறையிடம் நீதிபதிகள், கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். அவர் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஹேபிட்சுவல் அஃபெண்டர் அல்ல. அவரை அப்படி நடத்தாதீர்கள் என்று கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கையைப் பிடித்த பெண்.. தடுக்க சென்ற பாதுகாவலர்… முறைத்த மோடி!