அரசம்பட்டி விதையா? ஆந்திரா விதையா?: முதல்வரை சந்திக்கும் தென்னை விவசாயிகள்!

Published On:

| By Kavi

arasampati coconut farmers meet mk stalin

arasampati coconut farmers meet mk stalin

ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் தென்னை விதைகளை அரசம்பட்டி விதைகள் என்று சொல்லி தமிழக மக்களிடம் வழங்குவதாக தென்னை விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 5000 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் இரண்டு தென்னங்கன்றுகள் அரசு தரப்பில் இலவசமாக வழங்கப்படும்.

இதுதவிர 50 சதவிகித மானியத்திலும் தென்னங்கன்றுகள் வழங்கப்படும். தமிழக வேளான் துறையில் உள்ள சுமார் 125 வேளாண் பண்ணைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி வழங்கப்படும் தென்னங்கன்றுகள் தரமற்றதாக உள்ளதாகவும், தென்னை விதைகளை தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாமல், புரோக்கர்கள் மூலமாக ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அரசம்பட்டி தென்னை விதை என்று கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து புகார் கொடுக்க இருப்பதாக தென்னை விவசாயத்துக்கு புகழ்பெற்ற அரசம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி அரசம்பட்டி அழகுதம்பியிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.

“ஆண்டுக்கு 30 லட்சம் தென்னை விதைகளை ஒரு விதை 80 ரூபாய்க்கு, அனைக்கோடி சண்முகம் என்ற வியாபாரியிடம் இருந்து வேளாண்துறை அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர் .

இதே அனைக்கோடி சண்முகம்தான் கடந்த அதிமுக ஆட்சியிலும் வேளாண் பன்னைகளுக்கு விற்பனை செய்தார்.

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கலைஞர் இருந்தபோது வேளாண்துறை அதிகாரிகள், நேரடியாக தென்னை விவசாயிகளிடம் சென்று, தாய் மரங்களை ஆராய்ந்து தரமான மரங்களை தேர்வு செய்து விதைத் தேங்காய்களை கொள்முதல் செய்வார்கள். அதன், விலையும் குறைவாக இருந்தது.

ஆனால், தற்போது அப்படி இல்லை, அரசம்பட்டி தேங்காய் விதை என்று ஆந்திராவிலிருந்து தரமில்லாத விதைகளை கொள்முதல் செய்து வந்து சப்ளை செய்கிறார்கள்.

தென்னை விதைகளுக்கு பெயர்போனது அரசம்பட்டிதான். ஆனால் அரசம்பட்டி பெயரில் ஆந்திர தென்னை விதைகளை விற்பது எங்கள் பெயரை களங்கப்படுத்துவது போல் இருக்கிறது.

நாங்கள் நல்ல தரமான விதைகளை ரூ 20 முதல் ரூ.25 வரையில் கொடுக்கிறோம், ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் தரமற்ற தென்னை விதைகளை 80 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்கின்றனர்.

அரசுத் தரப்பில் வழங்கப்படும் தென்னங்கன்றுகள் முழுமையாக அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் கிடைக்கிறதா என்பதும் கேள்விக்குறியாக தான் உள்ளது.

இந்த தகவல்கள் முதல்வருக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை. அதனால்தான் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது முதல்வரை சந்தித்து முறையிட தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தென்னை விவசாயிகள் புறப்படுகிறோம்” என்றார்.

இந்த குற்றசாட்டுகள் தொடர்பாக வேளாண் இயக்குநர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“முன்னதாக வேளாண் துறை இயக்குநராக சுப்பிரமணியன் இருந்தார். ஒரு வாரத்துக்கு முன்னர்தான், திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் வேளாண் இயக்குநராக பதவி ஏற்றுள்ளார். தென்னை விதைகளை சரியான முறையில் தான் கொள்முதல் செய்து வருகிறோம்” என்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

AK63: அஜித்திற்காக ரிஸ்க் எடுக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?

எச்.ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு!

arasampati coconut farmers meet mk stalin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share