தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி வழங்கிவிட்டது. ஆனால், 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திரையரங்குகள் சில திறக்கப்பட்டுள்ளன. புதிய பட ரிலீஸ் எதுவும் இல்லாததால் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்த வார வீக் எண்ட்டுக்கு எந்தப் புதியப் படமும் ரிலீஸாகவில்லை. செப்டம்பர் 03ஆம் தேதியிலிருந்து திரையரங்கில் புதிய படங்களை எதிர்பார்க்கலாம். அப்படி, ரிலீஸூக்குத் தயாராகிவரும் படங்களின் லிஸ்ட்டைப் பார்த்துவிடலாம்.
**லாபம்**
மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘லாபம்’. இந்தப் படத்தின் பணிகளில் இருக்கும் போதுதான், எதிர்பாராத விதமாக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைவு நிகழ்ந்தது. தற்பொழுது, படத்தின் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டது. இயக்குநருக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரையரங்கில் வெளியிட வேண்டுமென விரும்பியது தயாரிப்புத் தரப்பு. அதன்படி, வருகிற செப்டம்பர் 09ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
**டாக்டர்**
சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகிவருகிறது. அதிலொன்று, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள்மோகன், வினய் நடிப்பில் ‘டாக்டர்’. இந்தப் படம் முழுமையாக முடிந்துவிட்டது. ரிலீஸூக்கான சரியான நேரத்துக்காக காத்திருக்கிறது. மார்ச் 26ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், தேர்தல், கொரோனா இரண்டாம் அலை காரணங்களால் தள்ளிப் போனது. திரையரங்கில் மட்டுமே ரிலீஸ் செய்வதெனும் கொள்கையால் காத்திருந்தது. இந்நிலையில், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம்.
**பஹீரா**
தமிழில் கமர்ஷியலாக ஹிட் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார் பிரபுதேவா. இவர், வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் படம் பஹீரா . ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதில், சிம்பு நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான AAA படம் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. அதன்பிறகு, அஜித் நடித்த நேர்கொண்டப் பார்வை படத்தில் கூட நடித்திருந்தார். தற்பொழுது இவர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பஹீரா’. சைக்கோ த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் அறிவிப்பும் விரைவில் வெளியாக இருக்கிறது.
**பார்டர்**
அருண்விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மாஃபியா சேப்டர் 01’ இந்தப் படம் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், அருண்விஜய்யின் மிகப்பெரிய நம்பிக்கைக்குரிய படமாக தயாராகிவருகிறது பார்டர். ஈரம், ஆறாது சினம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்க உருவாகிவரும் படம் தான் ‘பார்டர்’. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைப்பில் அருண்விஜய்க்கு நாயகியாக ரெஜினா நடிக்க இந்தப் படம் உருவாகிவருகிறது. ஸ்பை த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இந்தப்படத்துக்கான எல்லா பணிகளும் முடிந்துவிட்டது. ரிலீஸூக்கான திட்டங்களில் படக்குழு இறங்கியிருக்கிறது.
**லிஃப்ட்**
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் ஹீரோவாக நடிக்க உருவாகிவரும் படம் ‘லிஃப்ட்’. இந்தப் படத்தில் கவினுடன் முக்கிய ரோலில் அமிர்தா நடித்திருக்கிறார். இப்படத்தை வினீத் வரபிரசாத் இயக்குகிறார். சீட் எட்ஜ் த்ரில்லராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் தயாரித்திருக்கும் இப்படமும் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட தயாராகிவருகிறது.
**எம்.ஜி.ஆர்.மகன்**
வருத்தப்படாத வாலிபர் சங்கம் & ரஜினி முருகன் பட இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘எம்.ஜி.ஆர்.மகன்’. சசிகுமாருக்கு ஜோடியாக மிர்ணாளினி ரவி நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க ரூரல் கமர்ஷியல் டிராமாவாக படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தையும் உடனடியாக திரையரங்க ரிலீஸாக எதிர்பார்க்கலாம்.
**அரண்மனை 3**
ஆர்யா, சுந்தர்.சி, ஆண்ட்ரியா, ராஷிகண்ணா, விவேக், கோவை சரளா, சம்பத், நந்தினி, மனோபாலா, சாக்ஷி அகர்வால் மற்றும் யோகிபாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்க உருவாகிவரும் படம் ‘அரண்மனை 3’. சுந்தர்.சி இயக்கத்தில் இப்படம் உருவாகிவருகிறது. முந்தைய இரண்டு சீரிஸ்களிலும் த்ரிஷா மற்றும் ஹன்சிகா பேய்களாக டெரர் காட்டியிருந்தார்கள். காமெடியும் திகில் பேய்க் கதையுமாக ரசிகர்களின் ஃபேவரைட் படங்களானது. இப்போது, மூன்றாவது பாகத்தில் பேயாக ஆர்யா நடித்திருக்கிறார். இந்தப் படத்தையும் தியேட்டரில் மட்டுமே வெளியிடுவதென்பதில் தீவிரமாக இருந்தார் சுந்தர்.சி. அவர் திட்டமிட்டபடியே விரைவில் திரையில் வர இருக்கிறது.
**- ஆதினி**
�,”