29 ஆண்டுகள்… முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை… ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு விவாகரத்து!

Published On:

| By Selvam

ஏ.ஆர்.ரகுமான், இந்திய சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர். ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு திருமணம் கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது.

வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்தை கடக்கும் இந்த நேரத்தில், சாய்ரா தன்னுடைய பிரைவசியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “திருமண பந்தத்தில் முப்பது வயதை எட்டுவோம் என்று நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால், அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது  எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: பாடி ஷேமிங் பிரச்சினையை எதிர்கொள்பவரா நீங்கள்?

டாப் 10 நியூஸ்: மகாராஷ்டிரா தேர்தல் வாக்குப்பதிவு முதல் திமுக உயர்நிலை குழு கூட்டம் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share