’தமிழுக்காக தனி பெருமைச் சின்னம்’ : தமிழ் புத்தாண்டில் ஏ.ஆர். ரகுமான் சொன்ன குட் நியூஸ்!

Published On:

| By christopher

ar rahman announce tamil perumai chinnam

ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். ar rahman announce tamil perumai chinnam

தமிழ்மொழி மீது தனது தீராக் காதலை வெளிப்படையாக காட்டிவிடுவதில் திரையுலகில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பலருக்கும் முன்னோடியாக இருக்கிறார்.

தமிழ் போற்றும் பல சினிமா பாடல்களை தந்த அவர், கடந்த 2022ஆம் ஆண்டு ’மூப்பில்லா தமிழே தாயே’ என்ற மியூசிக் ஆல்பத்தை வெளியிட்டார்.

அதன் அடுத்தக்கட்டமாக தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக் கூறி, அதுகுறித்த அப்டேட்டை இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “’தமிழ்’ உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.

இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது.

ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் இப்பெருமைச் சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவல்களை வெளியிடவிருக்கிறோம்.

இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்” என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share