27 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர் ரஹ்மானும் பிரபு தேவாவும் இணையும் படம்!

Published On:

| By Minnambalam Desk

AR Rahman and Prabhu Deva

பொதுவாக ஏ.ஆர் ரகுமான் தான் இசை அமைக்கும் படங்களில் ஒன்று அல்லது இரண்டு பாடல்களைத்தான் பாடுவார். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு தான் இசையமைக்கும் ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் அவரே பாடுவது இதுவரை நடந்தது இல்லை. ஆனால் இப்போது Behindwoods மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் தயாரித்து இயக்க பிரபு தேவா நடிக்க, தான் இசையமைக்கும் மூன்வாக் படத்தில் வரும் ‘ஏத்து’, ‘மெகரினா’, ‘மயிலே’, ‘டிங்கா’, ‘ஜிகர்’ என ஐந்து பாடல்களையும், ஒரு நாளும் இல்லாத திருநாளாக , ஏ.ஆர் ரகுமானே பாடி இருக்கிறார். (என்னவோ திட்டம் இருக்கு)

மின்சார கனவுகள் படம் வந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

“மியூசிக்கில் ஏ.ஆர். ரஹ்மான் சார், டான்ஸில் பிரபுதேவா சார் இருவரும் இந்தியாவின் தலைசிறந்த திறமைசாலிகள். சிறு வயதில் நான் ரசித்த ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களின் அனுபவத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். இந்த தலைமுறை ரசிகர்களுக்குத் அந்த அனுபவத்தை மீண்டும் தர வேண்டும் என்ற முயற்சி தான், ‘மூன்வாக்’. இதில் இசைக்கும் நடனத்திற்கு குறைவே இருக்காது.

ஒவ்வொரு பாடலும் நட்பு, உழைப்பு, சந்தோஷம் மற்றும் வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது. பிரபு தேவாவுக்கு ரஹ்மான் சார் குரலைத் தவிர யாரையும் என்னால் யோசிக்க முடியவில்லை. நான் விடாமல் நான்கு மாதங்கள் முயற்சித்து நீங்கள் தான் பாட வேண்டும் எனக் கேட்டு கொண்டே இருந்தேன். இறுதியில், இந்த ஐந்து பாடல்களையும் ஏ.ஆர். ரஹ்மான் சார் தான் பாடியுள்ளார்.

ADVERTISEMENT
AR Rahman and Prabhu Deva

பிரபுதேவா சார் இந்த படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் இரண்டு வாரம் ரிகர்சல் செய்துள்ளார். ‘மயிலே’ பாடலுக்கு மட்டும் ஒரு மாதம் ரிகர்சல் செய்தார்.. ‘மயிலே’ பாடலுக்காக ஒரு முழு உலகத்தை CG-யில் உருவாக்கி இருக்கிறோம்.” என்றார் இயக்குனர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன்

ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில்: ”பிரபுதேவாவுடன் மீண்டும் பணிபுரிவது மகிழ்ச்சி. அப்போதைய பிரபுதேவாவுக்கும், இப்போதைய பிரபுதேவாவுக்கும் ஒரே வித்தியாசம் ‘கொஞ்சம் நரைச்ச முடி மட்டும் தான். பிரபுதேவாவின் எனர்ஜி அப்படியே உள்ளது. அவர் ஆடுவதைப் பார்க்கும்போது, இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது. ஒரு மிகப்பெரிய நடன இயக்குனர் ஒரு பாடலுக்காக ஒரு மாத காலம் ஒத்திகை மேற்கொண்டதை இதுவரை கண்டதில்லை. அந்த அதீத அர்ப்பணிப்பு இன்னும் ஊக்கமளிக்கிறது.

ADVERTISEMENT

இசையமைப்பாளராக, ஒரு பாடலுக்கான சரியான பாடகரை தேர்வு செய்யும் கடமை எனக்கு இருக்கிறது. மனோஜ் என் பரிந்துரைகளை ஒப்புக்கொள்ளாமல், ஒவ்வொரு பாடலுக்கும் இந்த பாடலை நான் தான் பாட வேண்டும் என உறுதியாக இருந்தார். இறுதியில் எல்லா பாடல்களுக்கும் அதே கூற, நானும் இந்த ஒரு படத்துக்கு மட்டும் எல்லா பாடல்களையும் பாடிவிடலாம் என முடிவுசெய்துவிட்டேன். கதை கூட நான் கேட்கவில்லை.” என்கிறார்.

பிரபுதேவா கூறுகையில், “என் திரை பயண தொடக்கத்திலிருந்தே ரஹ்மான் சாரின் இசை எனக்கு எப்போதும் உற்சாகத்தை அளித்துள்ளது. ரசிகர்கள் மூன்வாக் படத்தை ரசித்து மகிழ்வதை காண, நான் மிக ஆர்வமாக உள்ளேன்”என்கிறார்.

வீ ஆர் வெய்ட்டிங்…!

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share