தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிய சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர்தான் நியமித்து வந்தார்; ஆனால் ஆளுநரின் துணைவேந்தர்கள் நியமனங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இதனையடுத்து தமிழ்நாடு அரசு, மாநில முதல்வரே பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுவதற்கான சட்டத் திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை.
இதேபோல தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநர் ரவியால் கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதனடிப்படையில் 10 மசோதாக்களும் சட்டமாகி நடைமுறைக்கும் வந்தன.
உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த சட்டங்களில் ஒன்றுதான், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிக்க வகை செய்யும் அதிகாரம் வழங்கக் கூடிய சட்டம்.
இந்தச் சட்டத்துக்கு எதிராக, இந்தச் சட்டத்துக்கு தடை விதிக்க கோரி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் இன்று விசாரித்தனர். இந்த விசாரணையின் போது மத்திய- மாநில அரசுகள் ஒருவாரத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக விசாரணையின் போது அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமன், ஒரு வார காலத்துக்குள் அரசு தரப்பு பதிலளிக்க வேண்டும் என்பது குறுகிய காலமாகும்; 3 அரசு துறைகள் இணைந்து பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் கூடுதல் அவகாசம் வழங்க கோரினார். இதனை நீதிபதிகள் ஏற்கவில்லை.
தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இதேபோன்ற ஒரு மனு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு தரப்பு வாதங்களை பரிசீலனை செய்து 400 பக்கங்களுக்கும் மேலான தீர்ப்பு வழங்கியதுடன் தமிழ்நாடு அரசின் சட்டங்களுக்கும் ஒப்புதல் தந்துள்ளது; ஆகையால் இந்த பொதுநலன் வழக்கை விசாரணைக்கே அனுமதிக்கக் கூடாது என வாதிட்டார். ஆனாலும் நீதிபதிகள் இதனை நிராகரித்து மத்திய- மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 21-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.