நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை இன்று (மே 20) பிறப்பித்துள்ளது. Appointment of judges
சிவில் நீதிபதி (ஜூனியர் பிரிவு) தேர்வில் பங்கேற்க விரும்பும் வேட்பாளர்கள், அந்தத் தேர்வுக்குத் தகுதி பெற குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற வகையில், அனைத்து உயர் நீதிமன்றங்களும் மாநில அரசுகளும் சேவை விதிகளைத் திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மே 20 உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், இந்த உத்தரவு நடந்து கொண்டிருக்கும் நீதித்துறை ஆட்சேர்ப்புக்கு பொருந்தாது என்றும் அடுத்த ஆட்சேர்ப்பு நடைமுறையின் போது இந்த உத்தரவு கட்டாயம் கடைபிடிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அதாவது தற்போது பல்வேறு நீதிமன்றங்களில் ஆட்சேர்ப்பு நடைமுறை நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு, இந்த தீர்ப்பு பொருந்தாது என்று நீதிபதிகள் விளக்கமளித்திருக்கின்றனர்.
புதிய சட்டப் பட்டதாரிகளை ஒரு நாள் கூட பயிற்சி இல்லாமல் நீதித்துறை சேவையில் சேர அனுமதிப்பது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. போதுமான அனுபவம் இல்லாமல் நேரடியாக தேர்வு எழுதி வருபவர்களால் பல்வேறு விஷயங்களை கையாள முடிவதில்லை என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் ஏ.ஜி.மாசி, கே.வினோத் சந்திரன் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில், பெரும்பாலான மாநிலங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் மட்டுமே நீதித்துறை பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனை இருந்தது.
2002 ஆம் ஆண்டில், அகில இந்திய நீதிபதிகள் சங்க வழக்கில் உச்ச நீதிமன்றம் குறைந்தபட்ச பயிற்சித் தேவையை நீக்கி, புதிய சட்டப் பட்டதாரிகள் முன்சிஃப்-மாஜிஸ்திரேட் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அனுமதித்தது. திறமையான புதிய சட்டபட்டதாரிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.
இந்தசூழலில் தான், நீதித்துறை பணியில் சேர வழக்கறிஞர் பயிற்சி அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல்வேறு நீதிமன்றங்களும், குறைந்தபட்ச பயிற்சித் தேவையை மீண்டும் நிலைநாட்டும் நடவடிக்கையை ஆதரித்தன.
வழக்கறிஞராக எந்த நடைமுறை அனுபவமும் இல்லாமல் புதிய சட்டப் பட்டதாரிகள் நீதித்துறையில் நுழைய அனுமதிப்பது குறித்து நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட அமிகஸ் கியூரியான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் பட்நாகர் கவலை எழுப்பினார்.
இந்தசூழலில் தான் மீண்டும் 2002ல் இருந்தபடியே நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறை பணியில் சேர மூன்று ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சி அனுபவம் அவசியம் என்று கூறியிருக்கிறது.
நீதிபதிகளாக நியமிக்கப்படுவோர் தங்கள் முதல் பணி நாளில் இருந்தே வாழ்க்கை, சுதந்திரம், சொத்துக்கள் மற்றும் பல வழக்குகளை கையாள வேண்டியுள்ளது. எனவே, நேரடியாக சட்டம் படித்துவிட்டு வந்தால் மட்டும் போதாது.
அதாவது புத்தக அறிவு மட்டும் இருந்தால் போதாது. நீதிமன்ற நடவடிக்கைகளை கட்டாயமாக மூத்த வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெறுவதன் மூலம் புரிந்துகொள்ள முடியும். எனவே, (நீதித்துறை) தேர்வுக்கு முன் (வழக்கறிஞராக) பயிற்சி அவசியம் என்பதை ஒத்துக்கொள்கிறோம்.
எனவே, மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றிருப்பதை, 10 ஆண்டுகள் வழக்கறிஞர் பதவியில் உள்ள ஒரு வழக்கறிஞரால் சான்றளிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட வேண்டும். நீதிபதிகளுக்கு சட்ட எழுத்தராக இருந்த அனுபவமும் கணக்கிடப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்வெழுதி நேரடி நியமனம் மூலம் சிவில் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது மூன்று ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சி அவசியம் என்று தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இனி நேரடி நீதிபதிகள் நியமனம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. Appointment of judges